ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம் - தீபச்செல்வன்

Photo by Jr Korpa on Unsplash

இப்படித்தான் அந்த கொடுமிருகம்!
இந்த நகரத்தையும் தின்று கொண்டிருந்தது.!
கடல் மேலும் காய்ந்துவிட!
மிருகத்திற்கஞ்சி மண் சுருங்கி ஓடுகிறது.!
கால்களிற்குள் நீளுகிற அலைச்சலில்!
தொலைந்து போன பொருட்கள் மிதிபடுகிற!
நடைக்கனவுடன்!
உன்னை தேடியலைகிறேன்!
பின்னேரம் சுற்றுகிற முற்றுகையில்.!
மண் கிளம்பி பெயர்கிறது.!
சந்தி உடைந்து படைகளின் கால்களால்!
எத்துப்படுகிறது.!
சுவருக்குப் பக்கத்தில் நிற்கிற!
மிருகம் பின் கோடியை தின்னுகிறது.!
கூரைகளை கடித்து துப்பிவிட்டு!
ஒழுங்கையை பிடித்துச் செல்லுகிறது.!
முகப்பை நகங்களால் விறாண்டி!
தனது மொழியில் பறகள் வரைகிறது.!
பேய்கள் புகுந்து அடித்து!
கடைகளை தின்றிருக்க!
பனைகளின் தலைகள் அறுக்கப்பட்டிருக்கின்றன.!
கடலில் புதைந்து கிடந்த!
உனது சொற்களில் வடிகின்றன!
இந்த சின்ன நகரத்தின் பாடல்கள்.!
சாம்பலை நிரப்பி!
எறியப்பட்டிருக்கிற சாடியில்!
உன்னை அடைத்து வைத்திருந்தனர்.!
கடைசி வார்த்தைகளால்!
நம்மை வதைத்துக் கொண்டிருக்கிற!
கர்ஜிப்பில் கடைசியாயிருந்த!
நகரம்!
மூச்சடங்கி கிடக்கிற பறவையைப்போல!
துடித்து உயிரற்றுக் கிடக்கிறது.!
இப்படித்தான் அந்த கொடுமிருகம்!
நம்மை குறித்து ஒரு நாள்!
அச்சுறுத்தியபடியிருந்தது.!
நகரங்கள் ஆட்களற்றுப்போனது.!
பசிக்கு ஏற்றபடி கால்களால்!
நகரத்தை வளைத்து வைத்து!
தின்றுகொண்டிருக்கிறது ஒற்றை மிருகம்.!
கிளம்புகிற மண் வீதிகளால் பெருகி வழிகிறது.!
--------------------------------------!
03.03.2009,புதுக்குடியிருப்பு,நகரம்,வீழ்ச்சி
தீபச்செல்வன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.