ஆடி அடங்கி
குளிர் சாதன பெட்டிக்குள்
என் உடல் அடக்கம் பண்ணி கிடக்கையிலே
எனக்கு வாழ்க்கை துணையானவள்
என் உடன் இருந்தே பழகியவள்
திடீரென்ற இந்த விதி விளையாட்டால்
திக்கு தெரியாத
விடலை பிள்ளையாய் தடுமாறி
எப்படி நாட்களை தாண்டப்போகிறோம்
என்ற தடம் தெரியாமல்
கண்களால் எனைத்தேடியே
ஒப்பாரி பாட்டை ஒப்புவிக்கிறாள்
ஒரு பிசிறின்றி
என் குருதியால் உருவாகி உயிராகி
எனக்கு வாரிசானவர்களும்,
அந்த வாரிசுகளுக்கு வாய்த்த
அடுத்த வம்சத்தவரும்
எந்த பிறவியில் உன்னை காண்போம் என்று
அழுது களைக்கின்றனர்
கூடியிருந்த சொந்தங்களும்
முகம் தெரிந்தவர்களும்
பேசி பரிச்சயமானவர்களும்
என் குணம் சொல்லி
கண்ணீர் சொரிகின்றனர்
இவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல்
எடுத்த உடல் விட்டு
அவர்களின் கண்ணுக்கு
தெரியாமல் நிற்கிறேனே
காலன் என்னை
என் வினைக்கேற்ற
உடல் எடுக்க தயார்பண்ண
வரிசையில் ஒன்னும்
புரியாமல் நகர்கிறேனே
என்னுடைய தருணம் வந்தும்
பிறவி எடுக்க செல்லாமல்
விடைப்பெற உணர்வின்றி
உங்களையே பார்த்துக்கொண்டு
வருத்தத்தில் வாடுகிறேனே !
காற்றோடு கரைந்துவிட்டேன்
தேடி எடுக்க முடியாமல்
தொலைந்துவிட்டேன்
தொலைந்த என்னை தோண்டி
எடுக்க முயலவும் வேண்டாம்
நித்தமும் நொந்து
கண்ணீரிலே மிதக்க வேண்டாம்
என்மீது மதிப்பிருந்தால்
என்னை மறந்து உங்கள் வாழ்க்கை
வழியில் முன்னேறுங்கள்
எனக்கு சாந்தி கொடுத்து
என்னை அனுப்பி வையுங்கள்
வேறு உடல் எடுக்க வழிவிடுங்கள்.
புவனா பாலா