மனம் - அகரம் அமுதா

Photo by Tengyart on Unsplash

எண்ண வலையில் இரையைத் தேடி!
உண்டு களித்து மீளாப் பறவை...!
ஆறறி வென்னும் சாரதி சொல்லை!
மீறி நடந்து மீளும் குதிரை...!
கற்பனை யென்னும் சிற்பம் செதுக்க!
சிற்றுளி கொண்டே சனித்த பாறை...!
தைத்திடும் முள்ளெனத் தைத்திடும் வேளை!
பிய்த்தெறிந் திடினும் பிழைத்தெழும் கோரை...!
ஒன்றை விட்டே ஒன்றில் தாவி!
ஒன்றைப் பற்றி ஓடிடும் தேனீ...!
சஞ்சல மாம்அலை தாவி யெழுந்தால்!
கொஞ்சமும் நிலையின்றிக் குதித்திடும் தோணி...!
பண்போ டன்பு பாசம் பற்றெனும்!
பண்ணெழு திடவே படைத்த ஏடு...!
செய்தமுன் வினைக்காய் வினைப்பயன் பெற்றிட!
மெய்யெனும் கையது ஏந்திய ஓடு...!
ஆசை என்னும் வேசையை நாடிப்!
பூசை நடத்திப் புலம்பிடும் போகி...!
பற்றாம் தூசைப் பற்றி யெடுத்து!
முற்றும் அகற்றி முனகிடும் யோகி...!
மறதி யென்னும் மருந்தைப் பூசி!
விரைந்து ஆறிட விளைந்த காயம்...!
நினைவாம் கணைகள் நிமிடமும் பாய்ந்து!
கணத்தில் தைக்கக் கடவுளின் சாபம்...!!
-அகரம்.அமுதா
அகரம் அமுதா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.