அன்றும் இன்றும்
இரா.சுஜீவன்
நடுநிசி் நேரம்
களிமண் வீடு கிடுகுக்கூரை
இடியில்லை மின்னல் வெட்ட
மழை பெரிதாயில்லை
ஆனாலும் தூவானக்குளிர்
தம்பி தங்கைகள் ஒற்றை அறை வீட்டுக்குள்ளே
விறாந்தையில் ஓலைப்பாயின் கதகதப்பில்
நானும் தாயும் காவலுக்கு
எங்கோ தூரத்தில் நாய் ஒன்று
குரைக்க தூக்கம் கலைந்து பயம் நெஞ்சை இறுக்க
உக்கிப்போன பனைஓலை வேலி பேருக்கு
ஓட்டை வேலியை ஏசியபடி வெளியே நோட்டமிட
காலடிச்சத்தம் நன்றாகவே கேட்கிறது கூடவே
மெலிதான உரையாடல் ஒழுங்கையில்
கறுத்த உருவம் வெட்டும் மின்னலில்
வேலிக்கு மேல் தெரிகிறது
பின் வளவில் பனைமரங்கள் காற்றில் ஆட வெள்ளையன் ஒங்கி குரைக்க
அவ்வுருவம் நகர்கின்றது
தொடர்ந்து ஐந்து உருவங்கள்
மறைந்து போக பனைகளை நினைத்தபடி
தூங்கிபோனேன்
விடிகாலை கரித்தூளால் பல்துலக்கிகொண்டு
மட்டை படலையை காலால் தள்ளி
வேலியோரமாய் நடக்கின்றேன் எதையோ தேடி
கிடைத்துவிட்டது ஈரமண்ணில் அழுந்தி மழைத்தூறலில் சிதைந்த உன் காலணியின் தடங்கள் .............. நீ தான்
இன்று புன்னகைத்துவிட்டு செல்கிறாய்
அன்றும் எனைப்பார்த்து ...............?