தீர்க்கதரிசனம்.. அரசிலையின்
மனோ.மோகன்
தீர்க்கதரிசனம்!
--------------------!
யாருமற்ற!
இதுபோன்றதொரு இரவின் தனிமையில்!
பத்து செண்டிமீட்டர் உயரமேயுள்ள!
பூனைக் குட்டியொன்றைப் பரிசளித்தாய்!
உன் துரோகங்களைத் தீர்க்கதரிசனம் சொல்லும்!
வார்த்தைகள் ஏதுமில்லை அன்று!
புகை படிந்த சாம்பல் நிறம் கொண்ட!
அந்தப் பூனையின் 'மியாவ்' வைத் தவிர!
நான் குடிக்கும் பால் அதற்கென்றானது!
என் தலையணை அது உறங்குவதற்கென்றானது!
கட்டிலில் அவிழ்த்துப் போட்ட என் உடைகள்!
அது மூத்திரமிடுவதற்கென்றானது!
வாரத்தைகள் அற்ற என்!
அறையின் தனிமையை நிறைத்த படியே!
பெரும் பசியை அறிவித்துக் கொண்டிருந்தது 'மியாவ்'!
பகல் பொழுதில்!
கபாலத்திற்குள் ஓடி விளையாடுவதும்!
படிக்கும் புத்தகத்தில் தாவிக் குதிப்பதுமென!
என் காலத்தைப் புசித்துக் கொண்டிருந்தது பூனை!
இன்றைய அந்தியில்!
ஓரிரு முறை உன் போர்விமானம் கடந்தபின்!
புகை படிந்து சாம்பல் நிறம் கொண்ட!
என் தெருவின் சிதிலங்களூடே!
உன் துரோகங்களைத் தீர்க்கதரிசனம் சொல்லும்!
வார்த்தைகள் ஏதுமில்லை!
'மியாவ்' வும் கூட இல்லை!
!
அரசிலையின் யுத்த தருமங்கள்!
----------------------------!
போதி மரத்திலிருந்து!
உதிர்ந்த அரசிலையொன்றில் புத்தனின் கறிக்கடை!
கிடைத்த குடல் துண்டுகளோடு!
பறந்து விட்டிருந்தன காக்கைகள்!
வேறேதேனும் எலும்புகள் சிதறியிருக்கிறதாவென!
மோப்பமிட்டபடியே எஞ்சிய சில நாய்கள்!
விற்பனை முடிந்த கணத்தில் கறிக்கட்டையில் ஏறி நின்று!
யுத்த தருமங்களை உபதேசித்தான் புத்தன்!
குருட்டுப் பைத்தியக்காரனைப் போல!
இலக்கற்று இருள் கவியும் கணத்தில்!
மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலின்!
கனவோடு கொல்லப்பட்டிருந்தான் மெசியா