மழைப் பெய்த ஈரம்!
தெருவெங்கும் சகதி !
மனித சேறுகளை மிதித்துக்கொண்டு - தனது!
பிய்ந்த கால்களால் பூமியைத் தாங்கி தாங்கி!
நடக்கிறாள் அந்த கிழவி!
யாரிடமும் கையேந்தவில்லை!
எவர் முகத்தையும் நேரிட்டுப் பார்க்கவில்லை!
ஊன்றிய தடியை எடுத்து!
மீண்டுமொரு அடியை வைக்கவே !
வானத்தையொரு முறை அண்ணாந்துப் பார்க்கிறாள்!
மெல்ல மெல்ல நடக்கையில் !
ஏதோ செய்யாத பாவத்திற்கு சிலுவையை !
சுமந்தவளைப்போல !
தன் வளைந்தமுதுகை நிமிர்த்தி நிமிர்த்தி சாய்க்கிறாள்!
இடையிடையே!
தரையில் தெரியும் ஈரத்தின் மீது!
உருவமின்றி நெளிந்தாடும் தன்!
மிச்சமுள்ள நாட்களின் வெறுமையை முறைத்தபடி !
நிற்காமல் நடக்கிறாள் அவள்..!
யாரவள்?!
இப்படியே அவள் எங்கே போவாள் ?!
எப்படியுமிந்த சமூகத்தில்!
யாரோ ஒருவனுக்கு அவள் தாய்!
யாருக்கோ மனைவியானவள்!
எந்த பாவிக்கோ மகள்; !
என்றாலும்!
அவளைப் பார்த்தாலே தெரிகிறது!
அவளொன்றும் பிச்சைக்காரியில்லை !
பாவமவள், பிச்சைக்காரி கூட இல்லை!!!
வித்யாசாகர்