(ஐங்குறு நூறு..)
(18) தொண்டிப்பத்து
பாடல் 171
திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலது
முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு இசைக்கும்
தொண்டி அன்ன பணைத்தோள்
ஒள்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோளே.
"அம்மூவன்" எனும் கவிஞன் தந்த
"நெய்தல்" பாட்டு இது.
"தொண்டி" துறைமுகப்பட்டினத்தை
உயிர்ப்போடு ஓவியம் தீட்டுகிறார் கவிஞர்.
அலைகளின் இன்னிசை ஒரு பக்கம்.
அந்த "இமிழ்தரும்" தரும் இசை
காற்றின் விரல்கள் அளைந்து அளைந்து
கடலைப்பிசைந்து
தாள ஒலிகளை இனிய பண்ணாக்கி பரப்புகிறது.
அயலது மறுகுதோறும் அதாவது
கடலை ஒட்டிய அந்த நகரின்
மூலை முடுக்கெல்லாம் மூடிப்போர்த்துவது போல்
இசைப்படலம் கவிகிறது;இனிமை கசிகிறது.
இமிழ் என்ற சொல் ஒன்றே போதும்.
அதில் எல்லாம் தெரிகிறது.
அதில் எல்லாம் விரிகிறது.
சொட்டு சொட்டாய் உதிர்தல்
மெல்லிய விழுதாய் இறங்குதல்
வண்டினங்களின் மெல்லிறகுகள்
வினாடிக்கு ஆயிரம் தடவைகள் கூட
அதிர்ந்து ஒலி எழுப்புதல்
அருவியின் நீர்ப்படலம்
நுண்மையாய்
முரட்டுப்பாறை வழியே
இழையும் வருடல் ஓசைகள் இவை.
தொலைதூர நீலக்கடலின்
உள்மூச்சுகள் கூட
என் இதயம் நுழைகிறது.
அவள் அழகிய தோள் அழகில்
நான் தொலைந்து போனேன்.
அவள் முறுவல்கள்
அந்த ஒள்தொடியில்
ஒளிந்து கொண்டு
எனக்கு பாய்ச்சல் காட்டுகிறது.
அதோ அவள் சிரிப்பொலி
கடலின் சிலம்பொலியாய்
என் உள்ளத்துள்ளே
முத்து மற்றும் மாணிக்கங்களின்
பரல்கள் ஆகி
நண்டுகளாய் குடைகின்றன.
மீன்களாய்
கிச்சு கிச்சு மூட்டுகின்றன.
கடலொலி
தொண்டியின் ஊருக்குள்ளும்
ஊறிக்கிடப்பது போல்
அவள் அழகின் ஒளியே
ஒலியாகி
என் இதயத்தின்
நான்கு அறைக்குள்ளும்
நாடி துடிக்கிறது.
அதன் மூவிதழ் ஈரிதழ்
கதவுகளை
திறந்து திறந்து மூடி என்னை
இறந்து இறந்து பிறக்கவைக்கிறது
அல்லது
பிறந்து பிறந்து
மீண்டும் மீண்டும் பிறக்கவைக்கிறது
"அம்மூவன்" எனும்
அழகிய முதிர் கவிஞன்
அலைவிரிக்கும்
வரிகள் இவை
ருத்ரா