என்னென்ன நம் தேவை!
என்கின்ற கோணத்திலேயே!
என்றைக்கும் சிந்தித்து!
எப்படியோ ஒருமுடிவுக்கும் வந்து..!
அதை அடைந்திடும் நோக்கம்!
ஒன்றே வாழ்வாகிப் போனாற்போல்!
துடிப்புடன் நாளதும் பொழுதும்!
ஓயாமல் ஓடியாடி..!
ஒருவழியாய் ஆசையது!
நிறைவேறும் வேளைதனில்!
தேடத்தான் வேண்டியிருக்கிறது!
பலனாகக் கிடைத்ததா!
துளியேனும் பரவசமென்று!!
என்னென்ன தேவையில்லை!
எனத் தீர்மானித்து!
ஒருதெளிவாய் வாழ்கின்ற!
வகையினருக்கு மட்டுமின்றி..!
இதுயிதுவே தேவையென!
எல்லைகள்!
வகுத்துக் கொள்ளாமல்!
விடிகின்ற காலைகளை!
நன்றிப் புன்னகைசிந்தி!
எதிர்கொள்வது போலவே!
வருகின்ற வளர்ச்சிகளைச்!
சந்தித்தவராய்!
செய்யும் பணிகளிலே!
கவனத்தைக் குவித்துத்!
திறம்பட முடிப்பதையே!
பேரானந்தமாய்!
உணர்பவருக்கும்..!
தேடாமலேதான்!
கிடைத்து விடுகிறதோ!
நம்மில் பலருக்கும்!
தீராத் தேவையாகவே!
இருந்துவரும் அந்தப்!
பரிபூரண மனநிறைவு?!

ராமலக்ஷ்மி