இரு பத்து வருடங்கள்!
முன்னாலே...!
சேறு மிதித்து!
ஏறிய கப்பலும்!
கொட்டும் மழையில்!
நனைந்து போன!
என் புட்டுப் பொட்டலமும்!
நூற்றில் ஒன்றாய்!
பாம்பு பயத்தி;ல் !
அத்தையொடு ஒட்டிப்படுத்த!
பழையதொரு மண்டபமும்!
நீண்டதொரு கடல் பயணமும்...!
நான் முதலில் !
இருக்க மறுத்த!
மண்குடிசையும்...!
ஒற்றைத் தண்டவாளம்!
பக்கமாய் நின்ற ஒற்றை மரமும்!
குத்தித் தின்ற!
பழத்தின் விதையும்!
எனக்கே எனக்காய் இருந்த!
அந்த நீலச் சட்டையும்!
பச்சைப் பாவாடையும்!
பெரிய மீசையோடு!
குடிசை வந்து போன !
போலீஸ் மாமாவும்.!
நினைவுகள் இன்னும்!
தொலைக்கவில்லை.!
பத்து பைசா இன்றி!
வாங்காத பரீட்சைக்குத்தாளுக்கு!
விழுந்த அறையும் -அந்த!
தாமரைச்செல்வி ரீச்சரும்!
சுற்றி இருந்த பக்கத்து!
அன்ரி அங்கிள் எல்லாரும்!
என்னை அகதி என்று சொன்னதையும்...!
அப்பா சவுதியில்!
என்றும் சொல்லும்!
அம்மாவின் பச்சைப் பொய்களும்!
அப்பாவின் மரணம் பற்றி!
அறிந்த ராத்திரிப் பொழுதும்!
கிணற்றுக்கட்டும். !
உண்மை சொன்ன!
சிவப்புச் சட்டை சினேகிதியும்!
இதயத்தில் விழுந்த அறையாய்!
இன்னும் ஈரம் இருக்கிறது !
அகத்திலும் புறத்திலும்.!
சின்னதொரு மனசோர்விலும்!
புடைத்துக் கொட்டும் மழையென!
அத்தனை ஞாபகங்களும்!
மெத்தென்ற இருக்கையில்!
இன்றும் !
முள்ளாய் குத்தும் நினைவுகள்..!
பயணங்கள் முடியட்டுமே...!
ஊரில் என் முற்றத்து ரோஜாவும்!
பூக்கட்டுமே.. !
!
-கவிதா. நோர்வே
கவிதா. நோர்வே