01.!
ஆட்டுக்குட்டிகளின் தேவதை!
---------------------------------------------!
ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்!
இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது!
கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்!
அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்!
கூர் சொண்டுக் குருவி!
நிலாக் கிரணங்கள் வீழும்!
அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்!
அப் பாடலைக் காவுகின்றது!
பள்ளத்தாக்கில் ஆடுகளைத் துரத்தியபடி!
தண்ணீர் தேடிச் சென்றவேளை!
சிதைந்தவோர் குளக்கரையைக் கண்டுகொண்டாள்!
வரண்ட பாசிகளோடு வெடித்திருந்த தரையில்!
களைத்துப் போய் பெருவலி தந்த!
கால்களை மடித்து ஓய்வெடுத்தவளோடு!
சேர்ந்து கொண்டதொரு சிவப்பு வால் தும்பி!
வலிய விருட்சங்கள் உதிர்ந்துவிட்டிருந்தன!
விதவிதமாய்க் குரலிட்ட பட்சிகளெல்லாம்!
வேறு தேசங்களுக்குப் பறந்துவிட்டிருந்தன!
புழுதி மண்டிய மேய்ச்சல் நிலத்தில்!
மந்தைகளின் தேவதை!
முடங்கிப் போயிருக்கிறாள்!
உஷ்ணப் பிரம்பினைக் காட்டி!
அவளை மிரட்டி வைத்திருக்கும் வெயில்!
கடல் தாண்டித் தனது யாத்திரையைத் தொடரும்வரை!
பயணப் பாதைகளிலெல்லாம்!
ஆட்டுக்குட்டிகளே நிறைந்திருக்கும்!
இடைச்சியின் கனவில் எப்போதும் வரும்!
பசிய மரங்கள் அடர்ந்திருக்கும் வனமும்!
மீன்கள் துள்ளித் தெளிந்த நீரோடும் நதியும்!
புற்களும் புதர்களுமாய் அடர்ந்த சமவெளியும்!
அவளுக்கு எப்போதும்!
ஆதிக் காலங்களை நினைவுறுத்தும்!
வாடிச் சோர்வுற்ற விழிகளினூடு!
தொலைவில் அவள் கண்டாள்!
யானையாய்க் கறுத்த மேகங்கள்!
வானெங்கும் நகர்வதை!
இனி அவள் எழுவாள்!
எல்லா இடர்களைத் தாண்டியும்!
துயருற்ற அவளது பாடலோடு!
விழித்திருக்கும் இசை!
ஒரு புன்னகையெனத் ததும்பித் ததும்பி மேலெழும்!
ஆக்ரோஷமாக... ஆரவாரமாக...!
ஆட்டுக்குட்டியைப் போலவே துள்ளித் துள்ளி...!
02.!
அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை!
---------------------------------------------------!
கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்!
சாவல் குருவிக்கு என்ன திரை!
அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்!
அடித்த சாரலில்!
வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று!
நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே!
பிறகென்ன!
வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்!
துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட!
நங்கூரங்களின் கயிற்றோடு!
உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்!
அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து!
வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்!
பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி!
உணவு தயாரிக்கும் இளம்பெண்!
நிலவொளியில் புயல் சரிக்க!
போராடி அலையும் பாய்மரக் கப்பல்!
அழிந்த மாளிகை!
அசையாப் பிரேதம்!
அது என் நிலம்தான்!
உன் மொழி வரையும் ஓவியங்களில்!
எல்லாமும் என்னவோர் அழகு!
உண்மைதான்!
மந்தையொன்றை அந்தியில்!
நெடுந் தொலைவுக்கு ஓட்டிச் செல்லும்!
இடையனொருவனை நான் கண்டிருக்கிறேன்!
நீ சொல்வதைப் போல!
காலத்தை மிதித்தபடிதான் அவன் நடந்துகொண்டிருந்தான்!
நெடிதுயர்ந்த மலைகள்!
உறைந்துபோன விலங்குகளைத்தான் தின்று வளர்கின்றன!
ஆகவே மலைக் குகை வாசல்களில் அவன் அவைகளோடு!
அச்சமின்றி ஓய்வெடுத்தான்!
சொல்!
மெய்யாகவே நீ கனவுதான் கண்டாயா!
என்னைக் கேட்டால்!
வாசப் பூஞ்சோலை!
சுவனத்துப் பேரொளி!
தழையத் தழையப் பட்டாடை!
தாங்கப் பஞ்சுப் பாதணி!
கால் நனைக்கக் கடல்!
எல்லாவற்றிலும் நேர்த்தியும் மினுமினுப்பும்!
தேவையெனில் அமைதியும்!
தேர்ந்தெடுத்த மெல்லிசையும் என!
எல்லாமும் இன்பமயம் என்பேன்!
அத்தோடு!
இன்னும் கூட இரவு!
தினந்தோறும் கொஞ்சம் இருட்டை!
எனக்காக விட்டுச் செல்கிறது கிணற்றுக்குள்!
என்பதைச் சொல்வேன்!
வேறென்ன கேட்கிறாய்!
இலையுதிர் காலத்து மரத்தின் வலி!
அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

எம்.ரிஷான் ஷெரீப்