செம்மஞ்சள் பொழுதின் வானம்...!
தொலைவிலும் அருகிலும் மிதக்கும் கடல்...ஒரு பனித் துளி ஈரம் !
01.!
செம்மஞ்சள் பொழுதின் வானம்!
-----------------------------------------!
பூர்வீக வீட்டிலிருந்து சற்றுத் தொலைவுதான் எனினும்!
நடந்தே செல்லத் தலைப்பட்டோம்!
அரூப ஆவிகள் உலவும் தொன்ம பூமியென!
வழி காட்டியவர்கள் சொன்ன கதை கேட்டு அச்சமுற்றாயா!
எத்தனையெத்தனையோ தலைமுறைகளுக்கு ஊணிட்ட!
வேலிகளற்ற தரிசு வயலது!
பரந்து விரிந்த எம் பண்டைய பூமி!
வண்டி கட்டிச் சென்று மூத்தோர் விவசாயம் பார்த்த!
சருகுக் கோரைப் புற்கள் விரவிக் கிடக்கும் பயிர்நிலம்!
என் ஞாபகத்திலொரு பூநெல்லிச் செடியிருக்கிறது!
நிலா இரவுகளில் முற்றத்தில் பாய்விரித்து!
தலைகோதிக் கதை சொன்ன அம்மா நட்ட செடி!
பிஞ்சு விரல்கள் வலிக்க வலிக்க!
மூக்கு நீண்ட பேணியொன்றில் நீரேந்தியூற்றி!
நானதை வளர்த்து வந்தேன்!
அந்நிய நகரத்தில் நீயும் நானும்!
அலங்காரத்துக்காக வைத்திருக்கும் போலிச் செடி போலன்றி!
அது நன்கு தளைத்திருந்தது!
தேசம் விட்டகன்ற நாளில்!
அக் காலத்தில் நிழலுக்கென்று வளர்த்திருக்கக் கூடிய!
கொன்றையும் வேம்பும் இன்ன பிற மரங்களும்!
குளிர்ச்சியைத் தந்திருக்கும்!
கூடவே களைப்பறியாதிருக்க வாய்ப்பாடலும்!
கூட்டுக் கதைகளும் வெற்றிலையும்!
சிறு காயங்களுக்குச் சேற்று மண்ணுமென!
உழுத பின் வாடிக் களைத்த மூத்தவர்கள்!
அங்கமர்ந்து ஓய்வெடுத்திருப்பர்!
இன்று!
சட்டை கழற்றிச் சென்றிருந்ததொரு சர்ப்பம்!
தூர்ந்துபோய் வான் பார்த்திருக்கும் பெருங்கிணறும்!
பல பிரேதங்களைச் சுமந்திருக்கக் கூடும்!
எம் மூதாதையரின் இதிகாச ரேகைகள் பரவிய நிலத்தை!
பாதி விழுங்கிச் செரித்திருக்கின்றது கருவேலங்காடு!
அநேகப் பெருவிருட்சங்கள் மரித்துவிட்டன இப்போது!
வலிய துயர்களைக் கண்டு தளர்ந்து கிடக்கிறது பூமி!
அதன் உடலிலின்னும்!
சுருக்கங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கிறது!
கோடை காலத் தூரிகை!
அத்தி மரத்தில் சாய்ந்து நின்றபடி!
அந்திப் பேய் வெயில்!
மஞ்சளாய் ஊடாடிய தரிசு வெளி பார்த்துச் சட்டென!
''வான்கோ'வின் ஓவியமும் குரூர ஆயுதங்களும்!
ஒருங்கே கலந்த நிலம்' என்றாய்!
தங்க பூமியின் ஆகாயத்தில்!
செஞ்சாயம் கலந்தது வேறெப்படியாம்!
!
02.!
தொலைவிலும் அருகிலும் மிதக்கும் கடல்!
-----------------------------------------------------!
துல்லியமான நீர்ப்பரப்பு!
கூழாங்கற்களைப் போர்த்திப் படர்ந்திருக்கிறது!
சலனமற்றிருக்கிறது ஈர நிலத்தின் சயனம்!
போர்வையின் பாசிப் பூக்களும் பசிய அலங்காரங்களும்!
அசைந்தசைந்து!
காற்றின் தாலாட்டுக்களை இசைக்கின்றன மௌனமாய்!
உன் கையிலொரு மதுக் குவளை!
'அதிதிகளாய்ப் பறவைகள் வந்திரையும்!
மா கடலின் மேலேயான வானம் பற்றித் தெளிவாகத் தெரியும்!
சமுத்திரம் பற்றி மட்டும் சொல்' என்றாய்!
'இறுதி மதுவில் கரைந்தழியும் பேரண்டம்'!
வேறென்ன சொல்ல இயலும்!
03.!
ஒரு பனித் துளி ஈரம் !
-------------------------------!
இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து!
தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி!
ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவென !
வெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு!
குளிர்காலக் கம்பளிகளை!
பின்னுகிறது காலம் !
அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது!
நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட!
சிறு ஒற்றைக் கொடி!
வைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென !
விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள் !
எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம்!
நிலம் பிளந்து வந்த கொழுந்துக்குப் புதிது!
அலையெனச் சுழலும் காற்றும்!
நிமிரும்போதெல்லாம் !
உற்றுப் பார்த்தவாறிருக்கும் பரந்த ஆகாயமும் !
விசாலமாய் நகரும் பூச்சிகளும் இன்னபிற ஜந்துக்களும்!
இன்னும் !
மிதிக்கக் காத்திருக்கும் மனிதர்களும்!
வரும் காலங்களில்!
அதன் கிளைகளில் வந்தமரும் அணில்கள்!
இன்னும் பிறக்கவேயில்லை!
இலைகளின் மறைவுகளுக்குள் தம் !
கூடுகளைச் செதுக்கக் கூடிய பட்சிகள்!
கண்டங்கள் தாண்டி இன்னும் புலம்பெயரவேயில்லை!
வேர்களை வளப்படுத்தும் புழுக்களும்!
இன்னும் நகரவேயில்லை எனினும் !
எப்போதோ மனிதன் உறிஞ்சியகற்றி விட்டான்!
தாவரங்களுக்கான ஈரத்தை!
மண்ணிலிருந்தும் மனதிலிருந்தும்!
பனிக் கூட்டம் விடியலை!
பேரோசையுடன் பாடும் சொப்பனங்களெல்லாம்!
காடுகளால் நிரம்பி வழிகின்றன!
தீயிடம் யாசகனாக்கும்!
குளிர் காலத்தின் நீள இரவுகளிலும்!
வனங்களைத் தொழுத ஆதிவாசிகளை!
கடவுளிடம் மீளக் கொடுத்துவிட்ட இக் காலத்தில்!
துளிர்த்திடப் போதுமானதாக இருக்கலாம்!
தளிரின் வேருக்கென !
இப் பேரண்டம் தரும்!
ஒரு பனித் துளி ஈரம்
எம்.ரிஷான் ஷெரீப்