யாரேனும் காத்துக்கொண்டிருக்கலாம்!
இந்த நொடியில் ஒரு கடைசி சந்திப்பிற்காக.!
அப்போது யோசிக்கப்படலாம்!
இதுவரையிலான எல்லா சந்திப்பிற்கும்!
அடையாளமாய் சொல்லப்பட்ட!
அந்த மரத்தின் பெயர்.!
இந்த சந்திப்பிற்கான வார்த்தைகள்!
பூத்திருக்கின்றன அந்த மரத்தில்.!
எந்தப்பூ முதலில் உதிரும்?!
காத்திருப்பின் போதே!
உதிர்ந்து விடுகிற பூக்கள்!
இனி நினைவில் எப்போதும் மணக்கும்.!
தாமதமாக வந்துக்கொண்டிருப்பவரின் அவசரமும்!
காத்துக்கொண்டிருப்பவரின் பொறுமையும்!
இறுகக் கை கோர்க்கும்.!
நினைவுப்பக்கங்களை புரட்டும்!
காத்திருப்பின் நடங்கும் கைகள்.!
கேட்க நினைத்து!
கேட்காமல் விட்ட கேள்விகளையும்!
கேட்கப்படும் என்று நினைத்து!
தயாராக வைத்திருந்த பதில்களையும்!
அந்தக் காத்திருப்பு அரங்கேற்றும்!
யாருமில்லாத அரங்கத்தில்.!
மிகுதியானவை வெட்டப்பட்டு!
இல்லாதவை நிரப்பப்பட்டு!
உறவு முழுமையாக்கப்படும்!
அந்தக் காத்திருப்பு!
முக்கியமானதாகிறது!
எல்லா சந்திப்புகளை விடவும்.!
வருங்கால தனிமையின் சுவடுகளை!
தன் கால் தடங்களில் விட்டபடி!
இறந்த கால நினைவுகள்!
மெதுவாக நடந்து செல்லும்!
கடைசி காத்திருப்பின் பெரு வெளிகளில்

எம்.அரவிந்தன்