ஆதிரையில் வந்தவளே!!
ஆண்டவனின் மறுவுருவே!!
மார்கழியில் பிறந்தவளே!!
மார்கொடுத்து வளர்த்தவளே!!
தேர்ந்தெடுக்கா நற்பேறே!!
தேவனவன் திருக்கொடையே!!
பேர்கொடுத்து மகிழ்ந்தவளே!!
பேறெனவே நெகிழ்ந்தவளே!!
சோர்வுடனே தானிருந்தும்!
சுகமெனக்கு விழைந்தவளே!!
நீர்குடித்துப் பாற்சோறு!
நிதமெனக்குத் தந்தவளே!!
சீர்கொடுத்துச் சினந்தாங்கிச்!
செய்தபிழை மறந்தவளே!!
யார்கழித்துப் பேசிடினும்!
எனைஉயர்த்தி நின்றவளே!!
வேர்எனவே எனைப்பிடித்து!
வெளித்தெரியா திருப்பவளே!!
ஊர்தெரியச் சண்முகமாய்!
உள்ளழுது வாழ்பவளே!!
சார்ந்திருக்க மறுத்தவனின்!
சரித்திரத்தின் முதலெழுத்தே!!
தீர்ந்தெனது நாள்முடிந்து!
தேவனிடம் சேருகையில்!
நேர்ந்திடப்போம் தண்டனையை!
நீகுறைக்க வேண்டம்மா
எசேக்கியல் காளியப்பன்