கொசுக்களுக்குப் பயந்து
சாயங்காலம் முளைக்கும் முன்னே
மூடிக் கொள்கின்றன
சன்னல்களும் கதவுகளும்.
மின்சாரத்தில்
கால் பதித்து நிற்கிறது
மின் கொசு விரட்டி.
ஊழலுக்குப் பழக்கப்பட்ட
அரசியல் வாதி போல
துணிந்து பறக்கின்றன
கொசுக்கள்.
இழுத்துக் கட்டிய வலைக்குள்ளும்
நுழைந்து விடுகின்றன
கொலைகாரக் கொசுக்கள்.
கொசுக்கடியை
மூலதனமாகக் கொண்டே
சூடு பிடிக்கிறது
வியாபாரம்.
அடித்தலும் திருத்தலும்
தாண்டியும்
சுவரில் நசுக்கப்பட்டும்
திருந்த மறுத்து
வலிய வலிய
வலம் வருகின்றன
தலைமுறை தலைமுறையாய்
வாரிசுக் கொசுக்கள்

சேவியர்