அப்போதெல்லாம்
வெறும் ஐயாயிரம் தான்
நாலு கிரவுண்ட் வாங்கிப் போட்டிருந்தால்
நான் கோடீஸ்வரன்
அங்கலாய்த்தார் நண்பர்
அப்போதெல்லாம்
இங்கே
ஆள் நடமாட்டமே இருக்காது
பயங்களின்
பதுங்கு குழிதான் இந்த இடம்
என்றார் இன்னொருவர்.
எங்கே மழை பெய்தாலும்
இங்கே தான்
வந்து தேங்கும்.
இது
ஏரியாய் கிடந்த இடமப்பா
என்றார் மற்றொருவர்
அதோ அந்த இடத்தில்
இருந்தது
ஒரே ஒரு ஒற்றையடிப்பாதை
சைக்கிளில் வரவே
சங்கடப்படவேண்டும் அப்போதெல்லாம்
இதோ இந்த ஏரியா
நான்கு ரவுடிகளின்
தீர்மானத் தளங்கள்னா நம்புவியா ?
இது
கொலைகளின் கூடாரமாமப்பா !
ஆளாளுக்கு
காலாட்டிக் கொண்டே
கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போதெல்லாம்
கிரவுண்ட் ஐம்பது இலட்சம் தான்
நாலு வாங்கிப் போட்டிருக்கலாம்
என
பிற்காலத்தில் பேசக் கூடும்
நான்
என் மகனிடம்
- சேவியர் (http://xavi.wordpress.com/)
சேவியர்