முடிவுகள் இல்லாத
முடிவு தேடும்
பயணத்தில் நான்.
சாலைகளின் மீதான
பயணமும்,
சேலைகளின் மீதான
சலனமும்,
பக்கங்களைத் தாண்டி ஓடும்
வாக்கியங்களும்,
வாழ்க்கையில் தங்கி விடும்
பாக்கியங்களும்,
எல்லாம்
ஏதோ ஓர்
முற்றுப் புள்ளி முனையில்
அறையப்பட்டு
இறந்து போகின்றன.
சிரிப்புகளின் நுனிகளோ,
இல்லையேல்
கசப்பின் கனிகளோ,
எதுவுமே
எல்லைகளற்ற எல்லையை
கொள்கையாய் கொண்டதில்லை.
இன்னும் சிலநாள்
இருக்காதா எனும்
ஆசைக் கனவுகளை
வெளிச்சம் வந்து இழுத்துச்
செல்வது இயற்கை தானே !
முடிவு
முடிவு தான்.
தூண்டிலில் சிக்கிய மீன்
மீண்டும் ஒருமுறை
நீந்த முடிவதில்லை.
முடிவு
ஆரம்பம் தான்...
தூண்டில் மீனின் மரணம்
ஆகார தேவையின்
ஆதாரமாய் விடிவதுண்டு.
முற்றுப் புள்ளிகள்
முற்றுப் பெறுவதில்லை என்பதும்
முற்றுப் பெறாதவற்றிற்கு
முற்றுப் புள்ளிகளே
இல்லை என்பதும்
இலக்கணங்களில் இல்லை.
ஆனாலும்
சில
இடம் மாறிய புள்ளிகள்
கோலத்தின் தூண்கள் போல
வரவேற்புக் கம்பளம்
விரிப்பதுமுண்டு.
நானும் ஆசைப்படுகிறேன்,
முற்றுப் புள்ளியை
மையப்புள்ளியாக்கிய
ஓர்
வட்டமாய் வாழ

சேவியர்