காதலின் கடைசி ஸ்டேஷன் - வையவன்

Photo by Codioful (Formerly Gradienta) on Unsplash

காதலின் கடைசி ஸ்டேஷன்
வருமுன்பே விழிப்பு வந்து விடுகிறது
உறக்கம் கலைய முகம் கழுவுகையில்
தீஞ்சுவையோடு கழிந்த
இன்பப் பயணம் நினைவு வராமல்
இறங்க வேண்டிய சுமையும்
ஏறிக் கடக்க வேண்டிய
மாற்றமறியா நடைமுறைகளின்
மேம்பாலப் படிக்கட்டுகளும்
வெறிச்சோடிய மனத்தோடு
வெளியுலக அவசரங்களும்
மட்டுமே முந்தி நிற்கின்றன
அவளது கதகதப்பும்
அவளது வாசனையும்
இன்னும் முற்றிலும்
அகலாத அந்தப் போர்வையை
மடித்துத் தயாராகிக் கொண்டிருக்கும்
அவளும் அதற்கு முந்திய
இரவுகளின் இருளை
எரித்து எரித்துச் சிரித்த
நிலவும் நட்சத்திரங்களும்
ஒரு முடிவோடு தான் காத்திருக்கின்றன
இனி அவளை முத்தமிட முடியாது
அதே நிலவும் அதே நட்சத்திரங்களும்
அவளைப் போலவே கூடவே
வந்தாலும் அவர்கள்
அந்தப் பழைய அவர்களல்ல
காதல் மங்கித் தேய்ந்து போனதை
இமைகள் மூடி மூடி நினைவூட்டுகின்றன
ஏற்க விதிக்கப்பட்டிருக்கிரோம் எல்லாருமே
வையவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.