வரவேற்பாளர் - சேவியர்

Photo by Raimond Klavins on Unsplash

ஆடைகளில் சுருக்கம் விழாமல்,
உதடுகளின் சாயம்
உருகி வழியாமல்,
அலங்காரப் பதுமையாய்
வரவேற்பறையில் நான்.

தொலைபேசிச் சத்தம்
கேட்டுக் கேட்டு என்
காது மடல்கள் ஊமையாகிவிட்டன

போலியாய் சிரிப்பதற்காகவே
எனக்கு
ஊதிய உயர்வு
அவ்வப்போது வருகிறது.

கண்களில் கொஞ்சம்
காமம் கலந்தே
பாதி கண்கள் என்னைப் பார்க்கின்றன.
மீதி கண்கள்
அவசர யுகத்தின் பிரதிநிதிகள்
கடிகாரம் மட்டுமே பார்த்து வாழ்பவர்கள்.

என் குரலுக்குள்
குயில் இருக்கிறதாம் !
எனக்கு இருப்பவை தோகைகளாம் !
வர்ணனை வார்த்தைகளிலும்
புன்னகை மட்டுமே பூக்க வேண்டுமென்னும்
கட்டாயக் கட்டுகளில் நான்.

எனது சின்ன வயது மகள்
மாலையில் மறக்காமல்
மல்லிகை வாங்கி வரச் சொன்னாள்.

பூக்களின் வாசனைகளுக்கிடையே
என்
சராசரி வாழ்க்கையின் எதார்த்தம்
நாசி யை எட்டும் போது
முந்திக் கொண்டு தட்டுகிறது
மீண்டும் அந்த தொலைபேசி.

விரைவாய் மதிய உணவு முடித்து
கிடைக்கும் இடைவேளையில்
சிறிதே இளைப்பாறி
மீண்டும் உதடுகளில் புன்னகை நட்டு
முன்னறை வாசலில் தஞ்சம்.

அமிலச் சாலையில் கழுவப்பட்டு
மொத்த மனசும்
சாயம் போனதாய்த் தோன்றும்,
ஒவ்வொரு
மாலைப் பொழுதுகளிலும்.

சிரித்து வாழவேண்டும் என்று
கவிஞன் சொன்னது என்னிடம் தானோ ?
சிந்தனைகள் விட்டு விட்டு
வட்டமிட
கவலையாய் இருக்கிறது இப்போது.

மூன்று மணிக்கு பேசுகிறேன்
காலையில் கண்வலியுடன்
கணவன் சொன்னான்.
கடிகாரம் இலக்கைத் தொட்டபின்னும்
பயணத்தைத் தொடர,
இதுவரை ஒலித்த தொலைபேசி
இப்போது மட்டும் ஊமையாய்
சேவியர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.