காண்பது பொய்?.. உணர்வுகள்.. வசந்தம் - கிரிகாசன்

Photo by Patrick Perkins on Unsplash

காண்பது பொய்யா?.. உணர்வுகள்.. வசந்தம் வீசும் காலை!
01.!
காண்பது பொய்யா?!
------------------------------!
ஆழவெளி விண்ணோடை அழகுத் தோற்றம்!
அதனூடே வெடித்தோடும் ஒளியின் சீற்றம்!
கோளமெனச் சுழல்கின்ற குண்டுக் கற்கள்!
குலைந்தோடும் தீநாக்கு குழம்பின் வீச்சு!
தாழமுக்கக் குளிர்தணலைத் தணியாத் தன்மை!
தாமிவைகள் விழிகொண்டும் தெரியக் காணேன்!
ஏழையிவன் அறியாதோர் அதிசயங்கள்!
இருப்பனவோ, பொய்யோ யான் ஏதும் அறியேன்!
!
நீலவிண் பொய்யென்றால் நிலவும் பொய்க்கும்!
நீள்நதியும் குளிரோடை நீந்தும் மீனும்!
காலமெழும் தேன்கனிகள் கடலும் பொய்க்கும்!
கதிரெழுந்து வீழுமதன் காட்சி பொய்க்கும்!
ஆலமரம் அதனூடே அணையும் பட்சி!
அலைந்து வரும் தென்றலதும் அழகுப்பூக்கள்!
கோலமயில், கூவுங்கருங் குயிலும் பொய்யே!
குவலயமும் பொய்யேஎன் கூற்றும் பொய்யே!
வாழுகிறோம் மெய்கொண்டு வந்தோம் மண்ணில்!!
வாசமெழும் மலர்க்கண்டு கொண்டோம் இன்பம்!!
வீழுகிறோம் எழுகின்றோம் வீசும் காற்றில்!
வாசமது கொண்டோம் பின் வாழ்வும் கண்டோம்!
நாளும்பொழு தாகவரும் நம்மைக் காக்கும்!
நாணலிடை தொட்டசையும் நல்லோர் தென்றல்!
ஆழவிடும் மூச்சின்றிப் பொய்க்கு மாயின்!
அத்தனையும் பொய்த்து விடும் அகிலமன்றோ?!
அலையாடும் தூரத்தே அணில்கள் ஓடும்!
அழகுமயில் துளிவீழ அசைந்து ஆடும்!
தலையாடும் இளங்காற்றில் தருக்கள் ஆடும்!
தானாடி சலசலக்கும், தொலை தூரத்தில்!
நிலவோடும் நிற்காது நெருங்கி மேகம்!
நிலமோடும் அதனோடு நிதமும் ஓடும்!
கலைகொண்டு காண்கின்றேன் காணுமிவை எக்!
காலமும் பொய்யாவதிலைக் காணல் மெய்யே!!
02.!
உணர்வுகள்!
--------------------!
நீரோடும் நிலவோடும் நின்றுவெண் முகிலோடும்!
நெஞ்சத்தில் எண்ணமோடும்!
தேரோடும் தென்றலும் திசையெங்கும் பறந்தோடும்!
தேடியே கண்கள் ஓடும்!
பாரோடும் பரந்தஇப் பூமியின் இடமெங்கும்!
பலரோடிச் சென்றுவாழும்!
வேரோடும் உறவுகள் விளையாடும் விதியதும்!
வேடிக்கையாகும் வாழ்வும்!
ஏரோடும் வயல்கூடி எதிரோடும் காற்றோடு!
எழுகின்ற இன்பம் யாவும்!
பேரோடு வாழ்ந்திடும் பெருச்செல்வ வாழ்வினில்!
பிறையாகத் தேய்ந்து போகும்!
சேறோடும் மண்ணோடும் உழுதோடி பின்னாலே!
சேர்ந்துண வுண்டுவாழும்!
நோயோடிப் போகின்ற நிம்மதி வாழ்வினை!
நினைந்தேங்கும் நெஞ்சே நாளும்!
யாரோடிக் கேட்டாலும் விதியோடிச் செய்கின்ற!
விளையாட்டு வேறுஆகும்!
நீர்க்கூடி எழுகின்ற அலையாக ஊருக்குள்!
நின்றதை அள்ளியோடும்!
வேரோடு புயலுக்கு விழுகின்ற மரமாக!
வீழ்த்தியே உறவுகொல்லும்!
பேயாடி நடமாடிச் சிதைக்கின்ற பொருளாக!
பூவுடல் கொன்று பார்க்கும்!
நானோடி நடக்கின்ற நல்லதோர் பாதையில்!
நாலுபேர் தூக்கிஒடும்!
நாளோடி வரும்வரை நானாடி நடக்கின்ற!
நாளது இன்பமாகும்!
பாவோடும் பாஎண்ணும் மனதோடும் வாழ்வது!
பலமான உணர்வு கொள்ளும்!
பாலொடு பனியோடு பார்வையை கொள்வது!
பாவி இவன் உள்ளமாகும்!
மேலோடும் மதியோட முகிலோடி மறைத்திடக்!
காற்றோடி ஒளியை மீட்கும்!
சேலோடும் நீர்ச்சுனை சேற்றோடு தாமரை!
திகழ்ந்தாலும் தூய்மைகாணும்!
வேலோடு விளையாடும் முருகனின் தமிழோடு!
விளையாடி நாளும்போகும்!
காலோட முடியாது காடோடும் உடல்காணும்!
காலமே உண்மை சொல்லும்!
03.!
வசந்தம் வீசும் காலை..!
------------------------------------!
இனிதொரு நாளில் எழுகதி ரொனும் இலங்கிடு குவிவானம்!
பனிதரு காலை பசும்விரி புல்லில் படகுளிர் மெய்காணும்!
தனியிவன் பாதம் தரைபட மலராய் தருவது கிளர்வாகும்!
புனிதமும் போற்றி இருளினை ஓட்டி எழுகதிர் ஒளிவீசும்!
மனிதரின் வாழ்வும் மகிழ்வினைத் தேடும் மனதொடு விரைந்தோடும்!
தனியிடம் போகும் பாதையில் எங்கும் தவறுகள் உருவாகும்!
மனதினி லின்றி மகிழ்ந்திட வென்று மறுபடி மனம் வாடும்!
கனவினில் காணும் வர்ணங்கள் யாவும் காலையில் மறந்தாகும்!
தமிழது கண்டு தாகமென் றாகி தருவது எதுவேனும்!
அமுதமென் றெண்ண அதுசுவை மாறின் தமிழது எனையேசும்!
குமிழிடு குளிர்நீர் குமிழிக ளென்றும் கடுதியில் பெரிதாகும்!
அமைதி என்றாலும் அளவினில்மாற அது உடைந்தழிவாகும்!
புவனமும் காண இயற்கை யென்றெண்ணி பகலினில் நிலவோடும்!
தவறென மீண்டும் இரவினில் வந்தே தண்ணொளி தனைவீசும்!
அவசரம் வாழ்வில் எழுவதுஎன்றும் மனிதரின் மனமாகும்!
நவமுகம்கொண்டு நாம்சிரித்தால் நல் மலர்களை மரம்தூவும்!
பசுந்தரை மீது பனி வருமோடி பகலவன் அதை வெல்லும்!
வசந்தமும் ஓடி வரும்மன தெங்கும் மலர் மணம் நிறைவாகும்!
கசந்திடு மனமும் கனிவுற எண்ணக் கனவுகள் விரிந்தாடும்!
இசைந்திட மனமும் இன்பமொன் றேதான் எண்ணியே உறவாடும்
கிரிகாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.