உன்னுடைய இதயத்தில் !
எதை நிரப்பி வைத்திருக்கிறாய் !
என்று கேட்டாள் அவள். !
பூக்களும் வாசனையுமென்றான் அவன்!
கனியும் சுவையும் வேண்டுமென்றாள் அவள்!
உன்னுடைய கண்களில் !
எதை நீ வைத்திருக்கிறாய் என்றாள் அவள்!
உன் கண்களையும் !
உன்னுடைய ஞாபகங்களையும் என்றான் அவன்!
எதிர்காலத்தையும் வசந்தத்தையுமே !
விரும்புகிறேன் என்றாள் அவள்!
உன்னுடைய கைகளில்!
எதைச் சேமித்திருக்கிறாய் என்று கேட்டாள் அவள்!
உன்னையும் உன் அழகையும் என்றான் அவன் !
காலத்தையும் பாதைகளையுமே !
விரும்புகிறேன் என்றாள் அவள் !
உன்னுடைய பயணம் எங்கே என்றாள் அவள்!
உன்னிடம், உன் இதயத்திடம் என்றான் அவன்!
வெளிகளிலும் பறவைகளிலும்!
நானிருக்கிறேன் என்றாள் அவள்.!
உன்னுடைய பாடல்கள் யாதாயுள்ளன என்று கேட்டாள் அவள்!
உன்பெயராகவும் அதன் இசையாகவும் இருக்கின்றன !
என்றான் அவன்!
காற்றின் குரலையும் !
காலத்தின் மொழியையும் விரும்புகின்றேன்!
என்றாள் அவள் !
மேலும்!
அழும் குழந்தையையும் !
கண்ணீரோடுள்ள தாயையும் ஆதரிக்கிறேன் என்றாள்!
உன்னுடைய நிலப்பரப்பெது வென்றாள் அவள்!
புல்வெளியும் மலர்த்தோட்டமும் என்றான் அவன்!
நீரூறும் சுனையும்!
அடர் மரங்களுமே தனது நிலப்பரப்பென்றாள் அவள்.!
உனது கனவுகள் எங்கேயென்றாள் அவள்!
புல்வெளியில் !
பனித்துளி மீதிலே என்றான் அவன்.!
ஆற்றினோரமும் விளையும் வயலும் !
எனது இதயமென்றாள் அவள்!
பூக்களை எடுத்துச் சென்ற அவனிடம்!
அவள் கொடுத்தாள் !
கை நிறையத்தானியங்கள்.!
-- வெளிவாசல்பாலன்
வெளிவாசல்பாலன்