அம்மாவ பெத்தவளே !
ஆசையா வளர்த்தவளே !
மூனாங்கிளாசு படிக்கையில!
முன்னாடியே கட்டிக்கொடுத்தா!
மிச்சம் கிச்சம் வச்சுபுடுவேன்னு!
மூணுவேள சோறும் ஊட்டிவிட வருவ!
வெட்கம் விட்டு!
சொல்லுறேன்!
வத்தக் குழம்பு சாப்பிட்டு!
வருஷக்கணக்காகுது!
மணத்தக்காளி சாப்பிட்டு!
மாசக்கணக்கு ஆகுது!
நல்ல காப்பி குடிச்சே!
நாலு நாளு ஆகுது!
உலையில அரிசிபோட கத்துக்கோ!
ஒத்தாசையா இருக்கும்னு!
சொன்னதா ஞாபகம்!
ஒரு நாளு பசியில!
உலையில சோறு வைக்க!
வந்த சாதம்!
வேகாத கதை சொல்லவா!
வெந்து போன!
விரலோட வினையச் சொல்லவா!
வகையா வந்த கஞ்சிய!
குடிச்ச விஷயம் சொல்லவா!
பத்து மணி ரயிலுக்கு!
ஆறு மணிக்கே நீ வருவ!
பத்து நிமிஷம் தாமதம்னா!
பதறிப்போவ!
விமானத்துல போறேன்!
வெளிநாடு போறேன்!
விடிய விடிய நானும்தான்!
வேலைக்கும் போறேன்!
விடிஞ்சு வரும் போது!
விழுந்ததும்!
நான் துடிச்சதும்!
ரெத்தம் வழிஞ்சதும்!
தண்டவாளதுக்கு!
மட்டுந்தான் தெரியும்!
அஞ்சு மணிக்கு!
எழுந்தரிச்சு!
அரக்க பறக்க சமைச்சு!
அக்கா தங்கச்சி!
சண்டையெல்லாம்!
சமாளிச்சு!
என்!
ஆறடி முடிய!
சிக்கெடுத்து சீவி!
அரைமுழ!
ரிப்பன் கட்டி!
அனுப்பிவச்ச!
ஆறடி முடி இப்ப!
அரையடி ஆச்சு!
அதை சீவாம!
இருப்பதே!
பேஷனா!
போச்சு!
சொர்கத்து பாட்டிக்கு!
சொப்பனத்துலேயே!
கடுதாசி எழுதற!
இந்த பேத்திக்கு!
இன்னும்!
ஒரே ஒரு ஆசை பாக்கி!
முழுகாம இருக்கறேன்!
மூணு மாசம் ஆச்சி!
கத்திரி போட்டு கிழிச்சாலும்!
கத்தி வலிச்சு பிரசவிச்சாலும்!
ரெத்தின வாக்கு!
மாறாம!
முத்து முத்தா!
என் வயித்துல!
வந்து!
புறந்திடு தாயி
வே .பத்மாவதி