ஒரு பயணியின் வாழ்வு... வாசனை - வ. ஐ. ச. ஜெயபாலன்

Photo by Daniele Levis Pelusi on Unsplash

1. ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்!
!
சீஎன் கோபுரத்தை அண்ணார்ந்து பார்க்கையில்!
கண்ணாடிக் கோபுரத் தொடரின் மீது!
வசந்தத்தின் வருகையை எழுதியபடி!
ஒளிரும் காற்றுப் படிகளில் ஏறிச் சென்றது!
ஒரு தனித்த காட்டு வாத்து.!
சிறகுகளால் என்!
கண்ணீர் துடைத்தபடி.!
!
அம்மாவின் மரணத் துயரோடு!
வெண்பனியையும் உருக்கிவிட்ட!
காலம் வலியது.!
ரொறன்ரோ அடி நகரின் இடுக்குகளில்!
குனிந்துவந்த சூரியன்!
ஒளி விரல்களால் !
மிலாறுகளை வருடிவிடுகிறது.!
மொட்டை மரங்களின்மீது !
பசிய அறோரா துருவ ஒளியையும்!
வானவில்லையும் உலுப்பி விடுகிறது சூரியன். !
எங்கும் பசுமையும் பூக்களும் !
பட்டாம் பூச்சியுமாய்!
வண்ண உயிர்ப்பும் வாழ்வின் சிரிப்பும்.!
!
உலகம் சிருஸ்டி மூர்க்கத்தில் அதிர்கையில்!
தனி ரக்கூன் கடுவனாய் !
அடி நகரில் அலைந்து கொண்டிருந்தேன்.!
!
என்னோடு படகில் ஒரு புதிய நாள். !
எனக்காக நடுத்தீவின் கரைகளில்!
சுவர்க்கம் காத்திருந்தது.!
ஒற்றைத் தமிழனாக அங்குபோய் இறங்கினேன். !
ஏனைய தமிழருக்கு!
வசந்தம் வந்ததென்று யாராவது சொல்லுங்கள்.!
!
பாவம் என் நண்பர்கள்!
முன்னர் வந்திருந்தபோது!
ரொறன்றோ அடிநகர் பொந்துகளில் !
வாழ்வு இல்லை என்றார்கள்.!
வாழ்வு நிறைந்த ஸ்காபறோ வீடுகளை மடக்க!
மூன்று வேலை செய்தார்கள்.!
இம்முறை வந்தபோது !
வாழ்வு பற்றிய புதிய கண்டுபிடிப்புகளோடு!
வரவேற்றார்கள்.!
416 தொலைபேசி வட்டத்துள் அது இல்லை என்றார்கள்.!
905 வட்டத்துள் அது இருக்கிறது என்றபடி !
மூன்றாவது வேலை தேடிஅலைந்தார்கள். !
அவர்களது பெரிய வீடுகளும்!
பெரிய கார்களும் பெருமூச்சுவிட்டபடி!
வெறுமையாய்க் கிடந்தன. !
!
ஊர் பார்க்கவந்த என்னை!
எங்கும் வழிமறித்தது வாழ்வு. !
அந்த வசந்தம் முழுக்க!
அடி நகரின் பூத்த சதுக்கங்கள்!
பாணர்களும் கூத்தர்களும் கைப்பற்றிய தெருக்கள்!
மதுக்கடை !
ஒன்ராறியோ ஏரித் தீவு என்று!
வாழ்வின் மேச்சல் நிலங்களில்!
வசந்ததின் பொற்காசுகளைக் கறந்தேன்.!
!
இங்கும் வீட்டு முன்றலில் !
பூஞ்செடிகள் சிர்க்கின்றன.!
எங்கள் ஊர் வசந்தமோ!
அகதிக் குடிசை முன்றில்களில்கூட !
செவ்வந்திக்கும் அவரைக்கும் மலர் சூடி!
கூரைகளில்!
பாகல் சுரைப் பூக்களின் மகரந்ததைச் சிந்திவிடுகிறது.!
இடிபாடுகளூடும்!
தன் பூவை நீட்டிவிடுகிற புல்லைப்போல!
இறுதியில் வென்று விடுகிறது வாழ்வு.!
!
மலர் அருந்தும் தேன்சிட்டின்!
சிறகுகள் எனக்கு.!
இலை பிடுங்கும்!
மஞ்சள் காலத்தின் முன்னம் !
நெடுந்தூரம் போகவேண்டும். !
- வ.ஐ.ச.ஜெயபாலன்!
!
2. வாசனை!
அத்திலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது!
அவளது வாசனையை உணர்ந்தேன்.!
!
நாங்கள் பிரிந்தபோது!
வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும்!
ரொறன்ரொவை நீங்கின.!
ஒன்ராறியோ ஏரியின்மீது!
தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள்!
கண்ணீரை மறைத்தபடி!
நாம் விடைபெற்றோம்.!
!
அந்த வசந்தத்தில்!
சினைப் பிடித்த சல்மன் மீன்கள் நீந்திய!
ஒன்ராறியோ ஏரிக்கரையின்!
எந்தச் செடிகளை விடவும்!
பூத்துப்போயும் !
வாசனையோடும் என் படகில் இருந்தாள். !
!
படகை விட்டு இறங்கும்போது!
ஈழத் தமிழர் தலைவிதி என்றாள்.!
நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில்!
சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள்.!
வானை வெண்பறவைகள் நிறைத்தன.!
ஒருகணம் போர் ஓய்ந்தது.!
வடமோடிக் கூத்தர்களின் மத்தளமும்!
மங்களப் பாடலும்!
பாங்கொலியும் கேட்டேன்.!
மீன்பாடும் முழு நிலவில்!
அவள் கமழும் ஒரு படகு!
நெஞ்சுள் நுளைய நெடுமூச்செறிகின்றேன்.!
!
எங்கள் பிள்ளைகளை அறிமுகப் படுத்தவேணும்!
நாங்கள் இழந்த!
விருந்துகளையும் கந்தூரிகளையும்!
மட்டுநகர் வாவியையும்!
அவர்களாவது மகிழட்டும் என்றாள்.!
வெல்க பெடியள் என்றேன்.!
வெல்க நம் பெட்டையள் என்றாள்.!
கைகோர்த்தும் இருவேறுலகம்.!
!
நாங்கள் பிரிந்தபோது!
மேப்பிள் மரங்கள் பசுமை இழந்தது.!
கறுப்பு அணில்கள் !
எதிர்வரும் பஞ்சம் உணர்ந்து!
ஓக் விதைகளை மண்ணுள் புதைத்தன.!
ஒவ்வொரு தடவையும்!
சுவர்க்கங்களைத் தாண்டி!
நினைவுகளில் முடிந்த !
வண்ணத்துப் பூச்சி வழிகள் எங்கும்!
மேப்பிள் சருகுகள் மிதிபட!
உரித்துக் கொண்டு காரில் ஏறினோம்.!
ஸ்காபரோவில் பசித்திருந்த!
கொங்கிரீட் டைனசோர்களின் முன்னம்!
கைவிட்டுப் பேருந்துச் சாரதிபோல் போய்விட்டாள்.!
!
உடைகளுள் தாழம்பூ வைப்பதுபோல!
என் நினைவுகளின் அடுக்கில்!
அவள் தனது!
இறுதி அணைப்பின் வாசனையை!
இப்படித்ததன் விட்டுச் சென்றாள். !
-வ.ஐ.ச.ஜெயபாலன்
வ. ஐ. ச. ஜெயபாலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.