தீபட்ட மத்தாப்புகளாய் !
திடுப்பென்று, !
மிலாறாய்க் கிடந்த மரஞ்செடி கொடிகள் !
பூவும் தளிருமாய்ப் பொலியவரும் !
இளவேனில். !
நாளொரு பறவையும் !
பொழுதொரு விலங்கும்புக !
உயிர் பெறும் துருவ உலகம். !
சூரியன்கூடத் தூங்க மறுத்த !
குதூகலமான வெய்யில் இரவுகள். !
எந்தத் துயரும் தோல்வியும் இழப்பும் !
ஓர் நாள் முடிவுறும் !
மரணத்தை அன்று வாழ்வு வென்றிடும் என்று !
துயில் நீங்கி அசையும் மலைப்பாம்பினைப் போல் !
உருகிடும் ஆற்றில் மீன்கள் பாடும். !
வெப்பமானியே கிளர்ச்சியடைகின்ற !
இந்த நாட்களில் !
இடுகாட்டிலிருக்கும் நடுகல்போல் !
நான் மட்டுமேன் வாழாதிருக்கிறேன்? !
வாழ்வை ரசிக்கும் மரபில்லாத !
யாழ்ப்பாணத்தான் என்பதனாலா? !
இராவணனாலும், அனுமனாலும் !
மீண்டும் மீண்டுமென் ஈழத்தாயகம் !
தீயிடப்படுகின்ற துயரத்தினாலா? !
எதிரிகளாலும் குமாரர்களாலும் !
கற்பழிக்கப்பட்ட ஓர் ராசாத்தியுடைய !
சோகத்தை எழுதவல்ல வார்த்தைகள் !
என்னிடம் இல்லையென்பதனாலா? !
ஈசலாய் பறக்கும் என் தாயக மக்கள் !
உலகப்பந்தின் ஒவ்வோர் புறத்திலும் !
இறகிழந்து !
வீழ்ந்து கிடக்கின்ற வேதனையாலா? !
அகதிகளாகவும் !
சர்வதேசக் கூலிகளாகவும் !
மனித முகம் சிதைந்த பின்னரும் !
புகுந்த நாடுகளில் !
இது என் சாதி இது என் சொந்த ஊர் !
இது எனக்கான சீதனம் என்று !
நாறுகின்ற நம் தொழுநோய் தொடரும் !
சிறுமைகள் கேட்டுத் திகைத்ததனாலா? !
தசாப்தம் ஒன்றாய் என் தாய்நாட்டில் !
இலையுதிர்காலம் தொடர்கிறதாலா? !
விமானத்தில் வருகிற குருட்டுப் பிசாசுகள் !
பதுங்கு குழிகளில் பல்லாங்குழியாடும் தேசத்தில் !
தாயைத் தவிக்கவிட்டு வந்ததனாலா? !
நான் அனுப்பிடும் குரோணரைத் தின்னவும், !
வழித் துணையாய் அதை அழைத்துச் செல்லவும், !
சிறீலங்காவின் கொலை விமானங்களை !
குரோணர்களாலே அடித்து விரட்டவும் !
குரோணர்களாலே தலைக்குமேலே !
குண்டு துளைக்காத கூரைகள் போடவும் !
அறியா என் தாய் அகதி முகாம்களில் !
சீரழிகின்ற சேதி கேட்டதனாலா? !
வாழும் என் விருப்பைத் தேயிலைக் கொழுந்தாய் !
கிள்ளிச் செல்கின்ற துயர் எத்துயரோ? !
உருளைக்கிழங்குபோல் இயக்கமில்லாதெனை !
இரு எனச் சொல்கிற துயர் எத்துயரோ? !
- வ. ஐ. ச. ஜெயபாலன் !
நன்றி: ஒரு அகதியின் பாடல்
வ. ஐ. ச. ஜெயபாலன்