1.அம்மா!
போர் நாட்களிலும் கதவடையா நம்!
காட்டுவழி வீட்டின் வனதேவதையே!
வாழிய அம்மா.!
உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து!
அன்றுநான் நாட்டிய விதைகள்!
வானளாவத் தோகை விரித்த!
முன்றிலில் நின்று எனை நினைத்தாயா!
தும்மினேன் அம்மா.!
அன்றி என்னை வடதுருவத்தில்!
மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?!
அம்மா!
அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள்!
நம் முற்றத்து மரங்களில்!
மீண்டு வந்து பாடுதாம் உண்மையா?!
தம்பி எழுதினான்.!
வலியது அம்மா நம்மண்.!
கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள்!
வானில் ஒலித்த போதெலாம்!
உயிர் நடுங்கினையாம்.!
நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.!
இருளர் சிறுமிகள்!
மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர!
நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில்!
கன்னிமாங்கனி வாடையில் வந்த!
கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற!
கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே!
எங்கள் ஆற்றை எங்கள் காட்டை!
உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.!
என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை!
உன்னை வந்து பார்க்கலையாமே.!
போகட்டும் விடம்மா.!
அவனும் அவனது!
பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல!
உன்னைக் காக்க!
யானையின் மதநீர் உண்டு செளித்த நம்!
காடும் உளதே!
!
*கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு!
2.அம்மா!
வரமுடியவில்லை அம்மா!
தீயினை முந்தி உந்தன்!
திரு உடலில் முத்தமிட...!
சிங்கமும் நரிகளும் பதுங்கும்!
நீர்சுனையின் வழி அஞ்சி!
உயிர் வற்றும் மானானேன்.!
சென்னைச் சுவர்பாலை!
துடிக்கும் பல்லி வாலானேன்.!
தோப்பாகும் கனவோடு நீ சுமந்த!
நறுங் கனிகள தின்றதே!
ஈழத் தமிழன் விதி என்ற!
பேர் அறியா தேசத்துப் பறவை.!
துருவக் கரை ஒன்றில்!
அதன் பீயாய் விழுந்தேனே!
என் கனிகளச் சுமந்தபடி!
!
இறால் பண்ணை நஞ்சில்!
நெய்தல் சிதைந்தழியும்!
சேதுக் கரையோரம்!
படகுகளும் இல்ல.!
கண்ணீரால் உன்மீது!
எழுதாத கவிதகளைக்!
காலத்தில் எழுகிறேன்...!
3.போய்விடு அம்மா!
காலம் கடத்தும் விருந்தாளியாய்!
நடு வீட்டில்!
நள்ளிரவுச் சூரியன்!
குந்தியிருக்கின்ற!
துருவத்துக் கோடை இரவு.!
எழுப்பிவிட்டுத் தூங்கிப்போன!
கணவர்களைச் சபித்தபடி வருகிற!
இணையத்துத் தோழிகளும் போய்விட்டார்.!
காதலிபோல் இருட்டுக்குள்!
கூடிக் கிடந்து!
மலட்டு மனசில்!
கனவின் கரு விதைக்கும்!
தூக்கத்துக்கு வழிவிட்டு!
எழுந்து போடா சூரியனே.!
பாவமடா உன் நிலவும்!
கணணியிலே குந்தி!
இணையத்தில் அழுகிறதோ!
மூன்று தசாப்தங்கள்!
தூங்காத தாய்களது!
தேசத்தை நினைக்கின்றேன்.!
படை நகரும் இரவெல்லாம்!
சன்னலோரத்துக் காவல் தெய்வமாய்!
கால்கடுத்த என் அன்னைக்கு!
ஈமத்தீ வைக்கவும் எதிரி விடவில்லை.!
பாசறைகளை உடைத்து!
உனக்குப் புட்பக விமானப் பாடை!
இதோ எடுத்துக்கொள் அம்மா!
என் கவிதையின் தீ!
போய் வா.!
புதை குழிகளின் மேல்!
இடிபாடுகளின்மேல்!
பறங்கிக்குப் பணியாத என்!
மூதாதையரின் சுவடுகளில்!
பாலகர் சிந்திய இரத்ததின்மேல்!
நம்பிக்கைப் பசுமையாய்!
மீந்திருக்கிற!
பனந்தோப்புகளின்மேல்!
ஆலயங்கள், மசூதிகள் நிமிரும்!
எங்கள் கிராமங்களின்மேல்!
ஒரு யூட்டோபியாவில் இருக்கிற!
என் தேசத்தின் கனவுகளை!
மீட்டுவர வேண்டும்.!
4.அம்மா பாட்டு!
காலத்தால் மறைந்திடுமோ அம்மா!
பாலமு தூட்டடிட நீ காட்டிய வெண்நிலவு!
பாட்டில் கதைகளில் நீ!
பாங்குடன் ஊட்டிய சோற்றினிலே!
நாற்றில் பயிரெனவே!
நல்லறிவோடு நான் செழித்து விட்டேன்.!
எத்தனை கற்பனைகள் அங்கே!
எத்தனை சுடர்கின்ற நம்பிக்கைகள்!
முத்தேன நெஞ்சில் வைத்தாய்!
என் முழுமையின் வேரேன மறைந்து நின்றாய்.!
- வ.ஐ.ச.ஜெயபாலன்
வ. ஐ. ச. ஜெயபாலன்