அல் பொழுதில் ஒரு நாழிகையில் இடைவிட்டு மின்னும் மின்மினி தான் கண்களுக்கு தாரகையாய்....!
வழமையாய் காதில் ரீங்காரமிட்டு, தூங்கும் கணத்தில் தூக்கம் கெடுக்கும் இரத்த உறிஞ்சியைக் கூட காணவில்லை....!
புழுக்களும் இன்று துயில் கொண்டது போலும்.....!
மனத்தை வருடி இதயத்தில் உலாவரும் தென்றலின் ராகம் கூட கேட்கவில்லை...!
முவ்விருட்களை கொண்ட கருவறையாய் ஒரே கும்மிருட்டு.... ஊரே உணர்விழந்து உறங்கிக் கிடக்க, நாட்பட்ட பூமியாய் மனம் பதைக்கும் ஒரு மயான அமைதி....!
இருந்தும் ஆழ் கடலில் ஒரு சிப்பிக்குள் முத்தொன்று மூச்சுத் திணறும் ஒலி- மந்தமாய், அகோரமாய்....!
ஆனால், எங்கும் நிஷப்தம்...!
திரும்ப திரும்ப தொல்லையாய்... துன்புறுத்தும் வேதனையாய்.... அரிவை இவளுக்கு ஒரு அல்லலாய்...!
யூப்ரடிஸ்,டைகரிஸ் ஆட்டம் நீளமோ இவளின் இன்னல்கள்? -அவை!
ஊற்றெடுக்கும் இடங்களும் இன்று வரை விடை காணா புதிராய்....!
நைலை விட அகலமாக இதயத்துக்கான வழி....!
வழி நெடுகிலும் வலிகள் தான் மைல் கற்களாய்....!
மனம் விசும்பை விட விசாலமாய்....!
கொண்ட காயங்களோ பல பால்வீதிகளாய்....!
நிறைவேறாமல் பல மில்லியன் ஆசைகள் அடங்கி ஒடுக்கப்பட்டு சாக்கடலில் மூழ்கி பனிப்பாறையாய்....!
விழியோரமாய் ஊற்றெடுத்த உப்புத்திரவம் அமேசனின் அடர்த்தியாய், புராணங்கள் பல பாடி, ஓரப் புன்னகை ஹோட்டன் சமநிலத்து வரட்சியாய்.... சஹாராவில் கானல்நீராய் கொண்ட கனவுகள்.... கட்டிய கற்பனைக் கோட்டைகள் எவரஸ்ட் வரை உயர்ந்து, விலை மதிக்க முடியாமல் இன்று அரிஸோனா குழிக்குள்....!
பல சப்தங்களைத் தொடர்ந்து இன்று காணும் அமைதியில் ஏந்தானோ இந்த அவல அசரீரி?!
பிஞ்சிலிருந்து விஞ்சும் வரை சேமித்த மழைத் துளிகளின் சங்கமிப்பு தானோ இந்த நயகரா பேரிரைச்சல்?!
தொடரும்- கிழக்கு உதிக்கும் வரை; புது நாள் புலரும் வரை- இந்த அந்நிய மௌனத்தின் இரைச்சல்...!
விடியட்டும்....?!?

துர்ரத் புஷ்ரா