இருள்படர்ந்த கடற்பரப்பை நீவிவரும் காற்று!
எனது குடிசையின்மீது இடறுகிறது.!
இடையிடையே அது கிடுகை கூரையிலிருந்து!
பெயர்த்துவிடுவது போலவும், பின்னர் !
கிடுகு அமைதியடைவதாயும் இருந்த கணங்கள்!
என்னை கடத்திவைத்திருந்தன.!
கடந்துபோன காலங்களைப் போலன்றி,!
காற்றையும் கிடுகையும் தவிர!
என் மனம் வேறெதையும் வரைந்து கொள்ளவில்லை.!
பயமற்று இருந்தேன்.!
சமயத்தில் அதை ரசிக்கவும் செய்தேன்.!
தோகையாய் விரியும் கடற்காற்றின் இரைச்சல்!
காலம் என்னை கடைசியாக விட்டுச் சென்றிருந்த இடத்திலிருந்து!
தரையிறக்கிவிட,!
உடலுரசிய குளிர்காற்று என்னை நீவிவிட்டிருந்தது.!
மீன்கள் பேசிக்கொள்வது கூட கேட்கிறது.!
அரிக்கன்லாம்பின் வெளிச்சத்தை விடவும்!
கிடுகு ஓட்டை செதுக்கி அனுப்பிக்கொண்டிருந்த நிலாத்துண்டு!
சிறு உலகமாய் எனை வந்தடையவும்!
அதை உள்ளங்கையில் இருத்தி வைத்து !
அழகு பார்ப்பதுமாய், நான்!
வியாபித்திருந்த பொழுதில்!
கனவு ஒரு சிற்பமாய் வடிந்துகொண்டிருந்தது.!
நான் இன்னமும் உறங்கியிருக்கவில்லை
ரவி (சுவிஸ்)