என் இனிய இலங்கை மண்ணிற்கு!
கவிஞன் எழுதும் மடல்!
காதல் மடல்!
கண்ணீரும் சோகமும்!
நிறைந்த கடல்!
கொங்கமலை கீழ்ப்பாயும் அருவி யூற்று!
கொடுங்கோலன், நல்லரசன் ஆய்ந்தா நனைக்கும்!
கார்முகிலும் வளியோடு கூடிமழை!
களையெதுவோ? பயிரெதுவோ? பார்த்தா பெய்யும்!
நீதியோடு நல்லாட்சி நீயே செய்ய - எம்!
நிறைபாரம் என்காமல் தாங்கிக் கொள்ள - சரி!
நிகருரிமை தருவதற்குத் தயங்கும் சூழ்ச்சி !
தலைமைக்கு நிச்சயமாய்த் தருமே வீழ்ச்சி!
பெற்றெடுத்தாய் சில மக்கள் கோடி!
பேணி வழர்த்தாய் தினம் ஆடிப் பாடி!
காணி நிலச் சண்டைலுன் செல்லப்பிள்ளைகள்!
வாட்டி வதைக்க நாமா கிள்ளுக்கீரைகள்!
உணர்வுகளை, உறவுகளைப் புலத்தில் நீக்கி!
ஓடித்தான் போய்விட்டோம் சுயத்தை நோக்கி!
கந்தானைச் சந்தி வரை தமிழ் இரத்தம் ஓடுகையில் - உன்!
முந்தானை மடிப்புகளால் நீயதனைத் துடைத்தாயோ?!
பெருந்தன்மை கொண்டதம்மா தமிழன் நெஞ்சம்!
தேடிச்சென்று தீர்த்ததில்லை என்றும் வஞ்சம்!
உரிமைகளைக் கேட்கின்றோம் தரத்தான் பஞ்சம்!
உடைவாளைச் சாணையிட்டால் எவர்க்குமில்லை மஞ்சம்

மன்னார் அமுதன்