01.!
பதற்றம்!
----------------!
காற்றுள் குழையும் இருள்!
ஈரமாய்த் தன்னுயிர் விரித்து!
என் கனவுவெளி மூடிப்பின்னுகிறது!
பகல்களற்ற பொழுதுக்குள்!
விழுந்து கொண்டிருக்கும்!
நினைவுகளின் சொட்டுகள்!
மெதுவாய் என்னுயிர் கரைக்க!
அழுதலையும் இராக்குருவியின்!
பதற்றம் தொற்றித் தொடருகிறதெங்கும்.!
02.!
அலைவு!
----------------!
என்னிலத்து வெளியில் நடக்கிறேன்!
புன்னகையில் தொற்றியிருக்கும்!
பரிச்சயங்களின் முகம்!
ஆழப்புதைந்திருக்க!
சாவீடு முடிந்த மௌனப்படபடப்பு!
எங்கும் நெளிந்தலைந்து விரிகிறது...!
அந்நியனாய்த் தெரியும் என்முகம்!
வீதி முனைகளிலெல்லாம் ஒளிந்துகொள்கிறது...!
முகமற்று எனது வெளியெங்கும்!
நடந்தலைகிறேன்
ந.மயூரரூபன்