கனவில் கண்ட பெண்ணே - கவியன்பன் கலாம்

Photo by Maria Lupan on Unsplash

ஈற்று எதுகையாய் இனித்திடும்!
இணையான உன் இதழ்கள்:!
மாற்றியும் மடக்கியும் எழுதும்!
புதுக் கவிதைபோல்!
ஏற்ற இறக்கமாய் அமைந்த!
இடுப்பு அழகு;!
நேர்நேர் நிரைநிரை அசையாக!
நேர்கொண்ட பார்வையில்!
நிறைவான கனிவு;!
நேர்கொண்டு முடிந்து!
நேர்கொண்டு துவங்கி!
வெண் தளை விரவினால் வெண்பாவாம்!
நேர்வகிடு எடுத்த பின்னலினால்தான்!
உன் தலையும் பெண்பாலாம்...!
அசை சீர் தொடை அழகாய்!
அமைந்தால் மரபு கவிதைக்கு அழகு!
அசையும் உந்தன் நடையால்!
அழகுக்கே அழகு!
கண்ணதாசனின் கவிதைபோல்!
செப்பலோசையின் இனிமை!
உந்தன் குரலோசை!
வைரமுத்துவின் வைர வரிகளாய்!
வைரம் முத்துக்களாய் உதிர்த்திடும்!
வசீகர உந்தன் குதிகால்கள்......!
கைப் பேசியை காதினுள் வைத்து!
கைக்குள் அடக்கமாக பேசிடும் நளினம்!
ஹைக்கூ கவிதையும் மிஞ்சிடும் மெல்லினம்...!
வள்ளுவன் வடித்த மூன்றம்பாலாய்!
அள்ளி தெளித்திட்ட உன் இளைமையிலே!
முனிவரும் மயங்குவர் இளமயிலே.....!!!!
இல்பொருள் உவமை அணியாய்:!
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையே..!!! !
காசு மலர் பிறப்பு என்று ஈற்றில்!
முடிந்தால் வெண்பாவாம்!
கன்னி தாய்மை முதுமை என்று!
முடிவதும் பெண்பாலே!
உடலினை மட்டும் பாடினீர்!
உள்ளத்தினை ஏன் பாடவில்லை? என்று!
மடலினை யாரும் போட வேண்டா.!
மறுமொழி இதோ படியுங்கள்:!
உடலினைக் காட்டி எந்தன்!
உறக்கத்தை கெடுத்த இப்பெண் தான்!
உள்ளத்தினைப் பூட்டி வைத்து விட்டால்!
உள்ளத்தினுள் உள்ளதை நான் எப்படி!
உள்ளேசென்று பார்பேன்; படிப்பேன்?!
ஈறு கெட்ட எதிர்மறையாய் அங்கே !
இருந்து விட்டால்................!!!
தமிழைப் பெண்ணாய்க் கண்டேன்;!
பெண்ணைத் தமிழாய்க் கண்டேன்;!
கவிதையைப் பெண்ணாய்க் கண்டேன்;!
பெண்ணைக் கவிதையாய்க் கண்டேன்;!
இரண்டிலும் இன்பம் உண்டென்று கண்டேன்;!
இரண்டினையும் இணைத்தால் இன்னும் !
இரண்டு மடங்காகும் இன்பம் என்றே கண்டேன்...!
இல்லறப் புத்தகத்தில் இன்பத்துப்பால் ஒரு பகுதி;!
கவிதைப் புத்தகத்திலும் இன்பத்து பா(ல்) இருக்கட்டுமே
கவியன்பன் கலாம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.