முளைத்தெழும் கவிதை.. ஒப்படைத்தாயிற்று!
01.!
முளைத்தெழும் கவிதை!
------------------------------!
பேரழகைச் சுமந்தபடி !
சூரியனை நோக்கிச் சீறுது பச்சையம்பு.!
நலம் விசாரிக்க வரும் காற்றோடு!
கைகுலுக்கியவாறே!
குளிர் விருந்தளித்து மகிழும் தளிரிலைகள்.!
மஞ்சள் பூவிதழின் மருங்குகளில் வந்தமரும் !
வண்டுகளின் ரீங்காரங்களுக்குள்!
கண்விழிக்கும் அரும்புகளில்தான்!
எத்தனை பரவசம்.!
பசிய மென்கொடிக்கயிறுகளில் !
தளம்பாது இறங்கி வருகிற வித்தைக்கார அணிலுக்காய் !
அடிமரத்தில் வாய்பிளக்கும் சாம்பல்பூனை.!
அட, முதல்மரத்தோடுதான் முளைத்திருக்கும்!
கவிதையும். !
02.!
ஒப்படைத்தாயிற்று!
--------------------------!
நெடுஞ்சாலையில் எதிரேகிய!
சாவடிகள் யாவையுமே!
பொறுமையும் சிரம்பணிதலுமாய்!
கடந்தாயிற்று!
பாரப்பொதியாய் கண்ணுக்குள் கனத்த!
உடமைகளை!
உரிய முகவரிகளுக்குள்;!
ஒப்படைத்தாயிற்று!
பணிகளுக்குள்ளும் இயலுமளவு!
சுற்றுநிரூபம் பேணியாயிற்று!
ஆக,!
சக்கரங்களின் தடம்புரளல் இன்றியே!
வண்டி நகர்ந்திட!
இழைகளுக்குள் மிக அடர்வாய்!
இறுகக்கோர்த்த உருமணிகள்!
வெண்மையை மட்டுமே!
மீதமாய் இருத்திவிட்டுத்!
தெறித்துருளும் !
இவ்வெல்லைப்புற நாட்களின் முடிவினிலே!
அவன் வாக்களித்த வாசமொன்றே!
நிதர்சனமானால்…..!
செவிட்டுப்பூமி புரிந்திடத் தவறிய!
அல்லது மறுத்த!
உன்னத அன்பின் ரகசியங்களையெல்லாம்!
பரிமாறியபடி!
சதா ஓடிக்கொண்டேயிருக்கும் அருவியோரம் !
துளிர்களால் நெய்த ஈரவானம்!
கூரையாய் கவிழ்ந்திருக்கும்!
குளிர் வனத்த்pல்!
நீள்கூந்தல் தோள்தூங்க!
மேலுமையிரு பொன்விரல்களை!
விரலிடுக்கும் புதிதாய் பிரசவிக்க!
இலைநுனியூடே இடரிவீழும்!
பனித்துளியின் ரீங்காரமொன்றே!
பின்னிசையாய் ஒலிக்கும்!
அம்முடிவிலி யுகங்களுக்குள்!
சுற்றிச்சுழலும் பத்திப்புகையாய்!
கனிவு மணப்பதும்!
நான் எப்போதுமே விரும்புகிறதுமான!
உன் தாலாட்டொன்றே கேட்டிருப்பேன்!
மறுபடியுமோர் தொட்டில்குழந்தையாகியே

கிண்ணியா பாயிஸா அலி