தாய்மொழி - இரா.பழனி குமார்

Photo by engin akyurt on Unsplash

பன்மொழி பயின்ற பாவலர் ஆயினும்!
சிந்திக்கும் மொழியோ தித்திக்கும் தாய்மொழி !!
உள்ளத்தில் உறைந்திடும் உறங்காத உணர்வுகளை!
உலகிற்கு உணர்த்திட உதவிடும் தாய்மொழி!!
சிந்தையில் சிறகடிக்கும் சிதறல்களின் சிகரங்களை!
சீரோடும் சிறப்போடும் வெளிப்படுத்தும் தாய்மொழி !!
எல்லையிலா எண்ணங்களை எழிலுடன் வடித்திட!
ஏற்றமிகு எழுதுகோல் என்றென்றும் தாய்மொழி !!
!
இமைதிறந்த நாள்முதல் இதயம்நிற்கும் நேரம்வரை!
சுமையிலா அங்கமாய் உடனிருக்கும் தாய்மொழி !!!
முகமறியா முகம்கூட உரிமையுடன் உறவாடி!
முகவரியை முன்மொழியும் முத்தான தாய்மொழி !!
விந்தைமிகு விஞ்ஞானம் விண்ணளவு வளர்ந்தாலும்!
வியத்தகு விளைச்சலின் வித்து தாய்மொழி !!
மதமாற்றம் இடமாற்றம் எம்மாற்றம் செய்தாலும்!
எந்நாளும் மாற்றிட எவராலும் இயலாதது தாய்மொழி !!
!
அலுவல் ஆய்வென்று அயல்நாட்டை அடைந்தாலும்!
அவரவரை அடையாளம் காட்டிடும் தாய்மொழி !!
சுழலும் பூமிதனில் சுடரொளியாய் திகழ்ந்திட!
சுடரேற்றும் திருவிளக்கு நிகரில்லா தாய்மொழி !!
யாசிக்கும் உயிர்களில் நேசிக்கும் நெஞ்சங்களின்!
சுவாசிக்கும் மூச்சே நாம்பேசுகின்ற தாய்மொழி !!
காலம் முடியும்வரை நம்கடமையென காத்திடுவோம்!
இயங்கிடும் நம்இதயத்தின் இதயமாம் தாய்மொழி
இரா.பழனி குமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.