கலையாத கர்ப்பத்தில் நிலைத்திட்ட கருவாக!
குறையிலா அங்கமுடன் நிறைமாத பிறப்பாக!
உருவான உடலுடன் உலகினில் உயிர்ப்பது!
இயல்பாய் நடந்திடும் இயற்கையின் நிக்ழ்வுகள் !!
முழுமையாய் இல்லாமல் குறையுடனே பிறந்திட்டோர்!
காலத்தின் கோலத்தால் கால்களை இழந்திட்டோர்!
நடைபயிலா மழலைபோல் நடமாட முடியாதோர்!
விடியாத பகல்போல முடியாத ஓவியங்கள் !!
ஊனம் உள்ளதால் உள்ளம் உறைந்திட்டு!
இறுகிய நெஞ்சுடன் இன்னலுறும் இதயங்கள்!
மாறுபட்டு பிறந்ததால் வேறுபட்ட சமூகமாய்!
வாடிய மனதுடன் வாழ்கின்ற மனிதர்கள் !!
ஊனமுடன் பிறந்ததால் உடைந்திட்ட உள்ளங்கள்!
சுமையிலா வாழ்வை சுகமாய் பெற்றிட!
ஈரமுள்ள இதயங்கள் இரக்கமுடன் உதவிட்டால்!
மனவலியை மறந்திட்டு மகிழ்வோடு வாழ்ந்திடுவர் !!
ஊனமுள்ள உள்ளங்கள் ஊக்கமுடன் செயல்பட!
தரமான வாழ்விற்கு தடையின்றி நடைபோட!
உள்ளத்தில் உறுதிபெற உவகையுடன் உலவிட!
உதவிகள் செய்திடுவோம், ஊன்றுகோலாய் மாறிடுவோம்

இரா.பழனி குமார்