நமக்கிடையே வான் தெளித்த!
அடர்த்தியான மழையைத் தவிர்த்து!
வேறெவருமிருக்கவில்லை!
தூறல் வலுத்த கணமது!
வீதியின் ஒரு புறத்தில் நீ!
இதுவரை கவிழ்ந்திருந்த தலையை!
முக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்தி!
எதிரே வருமென்னைப் பார்க்கிறாய் !
காற்றடித்து வலுத்த மழைக்குத் தப்பியோட!
நானிருக்கும்போது நீ முயற்சிக்கவில்லை!
உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத்!
தூறலுக்குத் தெரியவுமில்லை !
உன்னிடமோ என்னிடமோ!
அந்திவேளையின் மழையை எதிர்பார்த்த!
குடைகள் இல்லை!
வானிலிருந்து பொழியும் நீர்த்துளிகளைத் தடுக்க!
மேனிகளுக்குத் தெரியவுமில்லை !
இத்தனைகள் இல்லாதிருந்தும்!
ஆண்மையென்ற பலமிருந்து நான்!
அருகிலிருந்த என் வீட்டிற்கு ஓடுகிறேன்!
காற்சட்டையில் சேறடித்திருக்கக்!
கவலையேதுமில்லை!
தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள்!
நான் மறையும்வரை காத்திருந்து நீயும்!
புத்தகங்களை நெஞ்சில் அணைத்து!
பேருந்து நிறுத்தம் நோக்கி!
ஓடத்துவங்குகிறாய் !
திரைக்காட்சிகளில் வரும்!
அழகிய இளம்பெண்களின்!
மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு!
யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை !
ஆங்காங்கே ஒழுகிவழியும்!
பேரூந்து நிறுத்தத்துக்குள்!
நீ முழுவதுமாக நனைந்திருக்க!
அடிக்கடி பின்னால் திரும்பி!
சேற்றோவியம் வரைந்திருந்தவுன்!
நீண்ட அங்கியைக் கவலையுடன்!
பார்த்தவாறிருக்கிறாய்!
தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும்
எம்.ரிஷான் ஷெரீப்