முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி!
அரைநொடியில் தொடைகளில் கனக்கும்!
காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள்.!
ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க!
முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும்.!
தலைக்குள் யாரோ இடையறாது பேசுவதன்ன அசெளகரியம் !
பொறுப்பதற்குள் இடையில் வாள் செருகலாய் வலி மிகும்!
முகவாயில் முழங்கால் இறுக்கி உதடு கடித்து மூச்சடக்கி வியர்ப்பாள்.!
வலி மிகுந்தவள் துடிக்கும் பொழுதுகளில் தவறாது!
தாய் சுடுநீர்போத்தலோடு ஞாபகங்களில் ஒத்தடம் தருவாள்!
அந்திக் கருக்கலின் அவன் வருவான் ஆயிரம் பழு சுமந்து!
கட்டிலில் சுருண்டிருக்கும் அவள் விழி கூட நோக்காதுரைப்பான்!
‘ப்ச்… திரும்பவுமா’ …‘வலி’ யின் அடர்த்தியை அவளுக்குணர்த்தியவாறு
சமீலா யூசுப் அலி, மாவனல்லை