ஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து அழுக்காடை!
வெங்காய வாடையுடனவள் வாவென்று கூடவழைக்காமல்!
உள் செல்வாள் என்னுள்ளம் வெளிச்செல்ல ஏதொவொன்று உட்செல்லும்.!
இல்லையென்பதவளுக்கு இனிக்கும் வார்த்தை….இதுவரை காலமும் நான் அவளுக்காயென அணுத்துணிக்கை கூட அசைக்கவில்லையென்பதவள்!
அறுதியான வாதம்.!
ஆதரவோடவள் தலைகோத விளைந்தால் தொட்டாற்சுருங்கியென!
தூங்குவதாயொரு பாவனை.!
நடுஇரவின் போர்வைகளில் வாய்வு மிகுந்தென் நெஞ்செல்லாம்!
எரிகையில் தள்ளிப்படுப்பாள் தன்னுறக்கம் கெடுமென்று…!
நிலாக்கால் முன்னிரவில் அவள் தோள் சேர்ந்து கவிசொல்லத்!
துடிக்குமென் மனசு புரியாமல் அடித்துச்சாத்துவாள் எல்லா யன்னல்களையும்.!
அதிசயமாயவள் முகம் கொஞ்சம் ஒளிவிடும் கணங்களில்!
வாழ்தலையும் காதலையும் பற்றி வசனங்கள் கோர்ப்பேன்.!
அடிமனசில் மண்டியிருக்கும் அழுக்கை கொட்டாவியோடு!
விட்டவள் அயர்வாள் என் ஆவி சோர… !
சமீலா யூசுப் அலி, மாவனல்லை