தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உன் கூந்தல்

ஆனந்தன்
முகத்தின் ஒளியில் கருகியதுதான் - உன்
கூந்தலோ!

அதன் கருமை கண்ட
அந்த அண்டங் காக்கைக்கும்
ஆனந்தம்!

தனக்கொன்று இல்லை என்று
தனக்குள் வருந்திய நிலவின்
தாக்கம் எனக்கு மட்டும்
தெரியும்!

கார்கால மேகமென கண்ட
கானகத்து மயிலும்
கொண்டை உயர்த்தி
தோகை விரிக்கக்
கண்டேன்!

தமிழ் கரைக் கண்ட
நக்கீரனுக்கு - நீ
முன்னோளாகி இருந்தால்
கூந்தலில் மணம்
உண்டோ என்ற வாதம்
வந்திருக்குமோ ?

உன்னை படைத்த
உன்னத பிரம்மனுக்கு,
உன் முகம் என்னும்
உல்லாச நிலவுக்கும்
உலகமெனும் உருண்டைக்கும்
கூந்தலெனும் உறவு வைக்க
ஆசை!

சன்னலோரத் தென்றலில்
சின்னதாய் அசையும்
உன் கூந்தல் கண்டு
மெல்லிய கொடியிலாடும்
மலர்ந்த மல்லிகைக்கும்
உன் கூந்தலேறி
ஊஞ்சல் ஆட
ஆசை

இல்லவை நகுதல்

கி.கண்ணன்
அல்லவை சொல்லல்
ஆனந்தம் கள்ளி

முற்றா இளமுலையார்
உற்று நோக்குவான்

சொல்லாது கைபிடித்து
கட்டிலுக்கழைப்பான்

தப்பென்று விளம்புவோர்
தலையிலடிப்பான்

மடவான்-
செய்யும் செயலோ?

பரத்தைய​ர் இல்லேகி
உறவாடி களிகூர்ந்து

அடங்காத காளையனாய்
மடக்கினான் என்னை

காமமிகுதி-
சுந்தர இதழ் சுவைக்க
கட்டளை இட்டது

கட்டுக் குழையா தளிர்மேனி
கட்டிபிடித்ததில் கரைந்தது

போதுமென்னும் வா​ர்த்தை
இல்லாமல்போய்-
போதலையே என்றது
என்பெண்மை

மென்மை உவமை
திண்மை உண்மை

பேரின்பம் எது?

“கழனி பாய்ந்த
வாய்கால் நீர்
நிரம்பியதும் திரும்பி
கழனி நீர் வாய்கால் வருமே
அதுதான்-

பேரின்பம்
“சமபோகம்” என்பதன்
சாத்திர பெயர்

சிற்றின்பம் எது?

வேர்க்க வே​ர்க்க
காரியம் முடித்து
அவசரத்தில் அணு​சிந்தி
ஓய்ந்து போதல்

இதில்-
இருவருக்கும் திருப்தியின்மை
“ஒருதலையான் காமம்”
திருவள்ளுவர் உரைத்தது
என-
இல்லவைச் ​சொல்லி
நகைத்தாள்

மாலை யணிந்த
மார்பன்

சீர்மல்கும் மதிமுகத்தான்
முறிமேனி

முயங்க மாட்டேன்
எதை இழந்தாலும்
கற்பு இழக்கடமாட்டேன்

பூப் பூத்தால்
கொடிக்கு மதிப்பு

கற்பு-
கன்னிக்கு மதிப்பு

பூ பறித்தால்
வதங்கி போகும்

கற்பு தவறினால்
இ​ழிவு நேரும்

ஆதலின்-
ஊடமாட்டேன்

பூத்தப் பூ
கொய்த முனைந்தால்
மூடமாட்டேன்…

என-
இல்லவைச் சொ​ல்லி நகைத்தாள்

பாவம் ஏது செய்திட்டோம்?

கலைமகன் பைரூஸ்
ஏழ்மையொடு ஒட்டிப் பிறந்திட்டோம்
ஏற்றமிலாச் சாதியில் பிறந்திட்டோம்
கூழின்றி குடும்பமே நட்டாற்றி லிருப்பதனால்
கொடுமைகள் பலசுமந்து துன்பத்தில்நாம்!

கற்றுத்தேர்ந்திட பள்ளிசென்றிட ஆசை
கயவர்கண்கள் குருடனதால் நாமிங்கே
முற்றும் துறந்துமுட்களிடை யேயின்று
முனிந்துமுனிந்து வேலைசெய்கின்றோம்!

கொடைகொடுக்கும் வள்ளல்கள் உண்டாமிங்கு
கேள்வியுற்றோம் செவிகளுக்குள் – இடியெனவே
மடைதிறந்த வெள்ளமென விழிநீரெங்கும்
மரித்துயிர்த்து மரிக்கின்றோம் நாமிங்கு!

கல்லுடைத்தும் கல்சுமந்தும் பால்யர்நாம்
கனிவின்றிய சொற்களுடு வாழ்வதற்காய்
சொல்லுகின்ற வன்செயல்கள் செய்கின்றோமே
சொர்க்கத்தில் உறங்குகின்றார் உயர்சாதி!!

மானுடநீதி பேசுகின்ற ஊழைகேட்டோம்
மனிதமின்றிய மானுடத்தின் அழகும்கண்டோம்
ஊனின்றி உடையின்றி தவிப்பதாலேநாம்
உண்டியொரு கவழத்திற்காய் மாடாயின்று!

எமக்கென ஒருதின மெடுக்கின்றார்
ஏற்றமிலா எமைக் காணாதிருக்கின்றார்
சுமக்கின்ற சுமைகளால் சிறுமைநீங்கி
சயனமின்றி யொருபோதும் அழுக்காய்நாம்!

சொப்பனங்கள் உண்டு சிறுவ ரெமக்குள்ளும்
சென்றிட வழியின்றி முட்களுக்குள்நாம்
நப்பாசையிலா சிறுவர்நாம் என்றபோதும்
நகைகாட்டா மானுடமென்ன மானுடமோ?

அழகான மேனியெங்கும் அசிங்கமாக –இவர்
அழுக்குகளே உதிரமீதும் ஓடுதிங்கு
பழக்கமிலை பணிகளிவர் என்றபோதும்
பணிந்தேசெய்கின்றோம் – பிறந்த்துதப்பா?

வடிகின்ற வியர்வையெங்கும் கொதிநீராக
வன்மனது தருகின்ற கொடுமையாலே
துடிக்கின்றோம் அனலிடை புழுவெனநாம்
தூங்குகின்ற தூயவர்கள் எங்கே? பாரும்!!

நிலைகெட்ட வலியாரின் கண்களெங்கே?
நிலைகெட்டுப் போகின்றோம் சிறுவர்நாமே
விலைபோகும் மனிதத்தின் விலையிறக்கி
வித்திடுங்கள் “சிறுவர்” விதைகளெங்கும்

மௌனம் பேசும் வார்த்தை

நீலநிலா செண்பகராஜன்
குளிர் காலத்தின் இரவொன்றில்
நீ எனக்காகப் போர்த்திய போர்வையில்
உன் பிரியத்தின் கதகதப்பை உணர்ந்தேன்

மழைக்காலத்தின்
மாலை நேரத்தில்
நீ தந்ந தேனீரை விட
சுவையாக இருந்தது
உனது அன்பான முத்தம்

அறை முழுக்க
மின் விளக்குகள் ஒளிர்ந்தாலும்
நீ இல்லாத அறை
இருண்மையை எனக்குள் தடம் பதித்தது

"வான்கா"வின் நவீன
ஓவியத்தைப் போன்று
என் உணர்வுகளைப்
புரிந்து கொள்ளாமல்
நீ ஊடலிடும் சமயத்தில்
உதிர்க்கும் வதைச்சொல்
உணர்த்தும்
உன் மனதின் வன்மத்தை
 
ஊடலுக்குப் பிறகு
சங்கீதமாய் ஒலிக்கும்
உனது சமாதான முயற்சியான
மெல்லியக் குரல்

தனிமையில் நான் இருக்கும் தருணத்தில்
உன் புகைப்படத்தின் வழியே கசியும்
மௌனம் பேசும் வார்த்தைகளை
யாரால் கவிதையாக மொழி பெயர்க்க முடியும்?
- நீலநிலா செண்பகராஜன், விருதுநகர், இந்தியா

கண்ணீரின் ஒரு துளி

நிரந்தரி ஷண்முகம்
 
தட்டுக் குச்சியில மாட்டுவண்டி
செஞ்சு தந்த ஆத்தாளும்,
பொழுதன்னைக்கும் நெத்தில
"நல்லாருக்கோணுஞ் சாமி" னு,
விபூதி பூசி உட்ர அப்பாரும்
கண்ணுக்குள்ளயே இருக்கறாங்க!

வெளிநாடு போறேனு வெள்ளந்தி போல
சொல்லிட்டு வந்தனே ஊட்ல!
இப்டி தன்னப் போல நிக்கறனே ரோட்ல!

நம்மூரு கலெக்டரு மாதிரி
சம்முனு வரோணும்னு,
காட்ட வித்து காசு குடுத்தியே!
இப்டி திக்கு தெரியா ஊர்ல
தெருநாயா திரியறனே!

பட்டணத்துக் கள்ளத்தனம்
இந்த பட்டிக்காட்டு பயலுக்கு
வௌங்காம போயிடுச்சே!

பாவிப்பய காச மட்டுமா
களவாண்டான்?
எங்கப்பாரு சிந்துன வேர்வையுந்தானே

கண்ணீர்

கல்முனையான்
எனது இதயத்தின் இடுக்குகளிலே
கண்ணீரின் பாசி படிந்துள்ளதால்
என் இதயத்தினுள் வர நினைப்பவர்கள்
கவனம் பாசியில் வழுக்கி விழுந்துவிடுவீர்கள்

சற்று தள்ளி நின்று எட்டிப்பாருங்கள்
அங்கே நைல் நதியாய் என் கண்ணீரும்
எவெரெஸ்ட் சிகரமாய் என் பெரு மூச்சும்
மனதில் பாரமாய் இமய மலைச்சாரல்கள்

என் இதயத்தின் இரத்த குழாய்களில்
கண்ணீர்த்துளிகளும் இரத்தமும்
போட்டி போட்டு மரதன் ஓட்டம் ஓடுகிறது
யார் இறுதியில் மரணப் பரிசை பெறுவது என்று

பரவாயில்லை என் கண் மட்டும்
இன்னும் உறங்கவில்லை ஏனென்றால்
அது வற்றாத கண்ணீரைச் சிந்தும்

காணிக்கை

கா.ந.கல்யாணசுந்தரம்
 
விரல் உனது நுனிகளில்
அந்த வயலின்
பிரசவிக்கும்
இன்ப நாதங்கள்....
ஒரு குளிர்கால
முன்பனி காலத்தில்
பூத்துக் குலுங்கும்
செந்தூரப் பூக்களின்
அலாதியான வாசம்...
இரவும் பகலும்
சந்திக்கும் அந்த
அந்திசாயும் நேரத்து
பறவைகள் சங்கமிக்கும்
சலசலப்பு ஓசை!
இரவு நேரத்து
அமைதியின் மடியில்
குழந்தையை தூங்கவைக்கும்
ஒரு தாயின் தூரத்து
தாலாட்டுப் பாடல்.....
இறைவா....
இத்துணை மனிதநேயமிக்க
உறவுகளின் மேன்மயை
அதன் புனிதத்தை
அறியவைத்தாயே...
தாயே...இத்தறையில்
இப்பிறப்பு பெற்றசுகம்
இனிதானதென்று
இயம்பிட இன்று நீயில்லை!
உன் கைப்பிடித்து
உலாவிய நாட்களுக்கு
இனிதான நிகழ்வுகளை
காணிக்கையாக்குகிறேன்!
 

கனா கண்டதில்லை

ரியாஸ் அகமத்
நீயிருக்கும்
எத்திசையும்
எனக்கு
நீ
கிழக்காகயிருக்க
கனா கண்டதில்லை.

என்
விழிப்பின்
முதல்
முகம்
உன்
முகமாகயிருக்க
கனா கண்டதில்லை.

எதற்குமே
அடிப்பணியா
என் மனதைகூட
உன்
சிரிப்பு
அடிமையாக்கியிருக்க
கனா கண்டதில்லை.

என்
படுக்கையில்
கை தொடும்
தூரம்வரை
நீயிருக்க
கனா கண்டதில்லை.

உன் சற்று
நேர
பிரிவுகூட
சூரியனை
இழந்த
பூமியாக
என் வாழ்க்கையிருக்க
கனா கண்டதில்லை.

ஆனால்,
உன்
வாழ்க்கையை
வேரொருவனுக்கு
சொந்தமயிருக்க
ஒருபோதும்
கனா கண்டதில்லை

சாளரம்

நிலாரசிகன்
பெருந்துயரத்தின் வலியோடும்
நிராகரிக்கப்பட்ட சொற்களின் வெம்மையாலும்
என்னிலிருந்து முழுவதுமாய்
நீங்கிச் செல்கிறாய்.
காற்றின் தீராப்பாடலெங்கும் நிறைத்திருக்கும்
நம் ப்ரியங்களின் உடைதலை
தூசி படர்ந்த சாளரத்தின் வழியே
பார்க்கிறேன்

உயிரிலிருந்து உலர்ந்து விழும்
கடைசி முத்தத்துடன்.
- நிலாரசிகன் (http://www.nilaraseeganonline.com/)

ஒத்துண்ணல்

புரட்சி கவிஞர் பாரதிதாசன்
இட்டதோர் தாமரைப்பூ
இதழ் விரித்திருத்தல் போலே
வட்டமாய் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறுவேறு இருந்து அருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்கம் இல்லை