பாவலர் பாரதியார் நினைவேந்தி - தமிழ்நம்பி

Photo by Tengyart on Unsplash

பாரதிக்குத் தனிச்சிறப்பு பழந்தமிழச் சித்தர்!
பாப்போல எளிதாகப் பாடிஎளி யோரும்!
தேரஉணர்ந் தெழுச்சிகொளத் தேசப்பற் றூட்டித்!
தீக்கனலாய்ப் பரப்பியமை தெரியாதார் இல்லை!!
வீரவர லாற்றுடனே வெவ்வேறு செய்தி!
விளக்கியநல் எழுத்தாளர்! வீறிழந்து மக்கள்!
சீரழிந்தே அடிமையுற்ற சிறுமைநிலை போக்கச்!
சீறிஎழச் செய்தஇத ழாசிரியர் இவரே!!
தொன்மையுடன் புதுப்புதுமை தோய்ந்தகருத் தெல்லாம்!
துளித்தயக்கு மில்லாது துணிவுடனே சொன்னார்!!
முன்மையுறத் தாய்மொழியில் முறையாகக் கற்பீர்;!
முந்திடும்ஆங் கிலவழியோ முழுபேடிக் கல்வி!!
வன்மையுடன் அதைத்தவிர்ப்போம்; வண்டமிழின் வழியே!
வழங்கிடுவோம் கல்வியென வழிவகையும் சொன்னார்!!
மென்மையொடும் அன்போடும் மிகப்பரிந்து சொன்னார்!
மேனமையுறத் தாய்மொழியே மிக்கதுணை என்றே!!
ஒருபக்கப் பாரதியே உருவாக்கிக் காட்டும்!
உதவாத போக்கிங்கே உள்ளதிது நன்றோ!!
ஒருவிடுக அயற்சொல்லை ஒல்லும்வா யெல்லாம்!
ஓங்குகலை சேர்த்துதமிழ் உயர்த்திடுக என்றார்!!
தெருளுறவே அவருரைத்த தேர்ந்தகருத் திதனைத்!
தெரிந்திருந்தும் பிறசொல்லைத் தீந்தமிழில் கலக்கும்!
அருவருப்பை மாற்றிடுவோம் அறிவியலும் கலையும்!
அருந்தமிழில் வளர்த்திடுவோம்! அன்புணர்வில் வாழ்வோம்
தமிழ்நம்பி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.