செந்தமிழ்நாட் டெல்லைபறி போகாமல் காத்தயிவர்!
சிறைக்குச் சென்று!
நந்தமிழின் சிலம்பாய்ந்தார்; நாவன்மை எழுத்தாற்றல்!
நனிவாய்ந் தாரே!!
இந்தியநா டுந்தமிழும் எனக்கிரண்டு கண்களென!
இயம்பி வந்தார்!!
பந்தமுறும் பெருமீசை பார்த்திருப்பீர் ம.பொ.சி.!
படத்தில், தாளில்!!
கடற்கரைசீர் வாய்ந்தநகர் கவின்சென்னை எளியகுடி!
களிக்கத்தோன்றி!
கடமையென மூவாண்டுக் கல்வியுடன் நெசவுசெயக்!
கடுகிச் சென்றார்!!
அடக்கமுறா வறுமையெதிர்த் தச்சகத்தில் கோப்பாளர்!
ஆனார் பின்னர்த்!
திடஞ்சான்ற மனத்தோடே தேசவிடு தலைக்குழைக்கத்!
தேர்ந்து சென்றார்!!
!
தேர்ந்தகட்சிப் பேராயம் சேர்ந்துப்புப் போர்மற்றும்!
திமிர்கொள் ஆட்சிச்!
சார்பறுக்கும் சட்டமறுப் பியக்கத்தும் பங்கேற்றார்;!
சற்றும் சோரா(து)!
ஆர்வமுற சிறைப்பட்டார்ஆறுமுறை; எழுநூற்றுக்!
கதிக நாட்கள்!!
சீர்மையுற சிறையடைப்பில் சிலம்புபடித் தாய்வுசெய்தார்!!
சிறப்ப றிந்தார்!!
தமிழ்தமிழர் உணர்விலவர் தமிழரசுக் கழகத்தைத்!
தனியே தோற்றி!
இமிழிந்தி யாமொழியால் இன்னின்ன மாநிலமென்!
றியற்றுங் காலைத்!
தமிழர்க்குக் குடியரசு தனியமைக்க வேண்டுமென்றார்!
தனிய ராக!!
துமித்துபெறக் கருதவிலை! தொடர்ந்திந்தி யாவிலொரு!
தொகுதி என்றே!!
செப்பமுற மாற்றுகபேர்! சிறப்புறவே தமிழ்நாடாய்ச்!
செய்வீர் இன்னே!!
ஒப்புறவே கல்விமொழி ஒண்டமிழே எனவாக்கி!
உயர்வைச் செய்வீர்!!
தப்பறவே ஆட்சிமொழி தமிழென்றே ஆக்கிடுவீர்!!
தகைமை காப்பீர்!!
இப்படியாய்க் குரல்கொடுத்தே இவற்றைவலி யுறுத்திவந்தார்!
எழுதி பேசி! !
இவர்பணியில் முன்னிற்கும் எல்லைகளைக் காத்தபணி!
இணையி லாதாய்!!
இவறலுற ஆந்திரத்தர் எழிற்சென்னை நகர்கேட்டு!
ஏழ்ந்த போது!
சுவரெனவே நின்றுசிலர் துணையோடே இவர்காத்தார்!!
சொல்வ துண்மை!!
திவளலற இவரியங்கித் திருவேங்க டம்மீட்கச்!
சிறையுஞ் சென்றார்!!
பெரும்பிழையாய்த் திராவிடத்தைப் பேசிடுவோர் சறுக்கிவிட!
பெரிய மீசை!
திருத்தணியை மீட்டெடுத்தார்! சித்தூர்புத் தூர்பகுதி!
சிலவும் மீட்டார்!!
திருப்பதியாம் வேங்கடமும் செந்தமிழ்சேர் பகுதிகளும்!
சென்ற போதும்!
ஒருதனியர் பெருமுயல்வில் ஓரளவு வடவெல்லை!
ஓம்பக் கண்டோம்!!
!
பொற்புறுசீர் குமரியொடு தேவிகுளம் பீர்மேடு!
பொலிசெங் கோட்டை!
தெற்கெல்லை காத்திடும்போர் திடத்தலைவர் நேசமணி!
திறத்தில் மூண்டு!
பெற்றியிலார் சிறையிலிட இவரறிந்து விரைந்தங்கே!
பீடிற் சென்றே!
சற்றும்போ ராட்டத்தைச் சரியாதே மேல்நடத்தச்!
சார்பு தந்தார்!!
நூற்றுக்கும் மேற்பட்ட நூலெழுதித் தந்துள்ளார்!
நுட்ப மாக!!
ஏற்றமுற வரலாற்றை எடுத்தியம்பி பலவிளக்கம்!
எடுப்பாய்ச் சொல்வார்!!
சாற்றியபல் கூற்றிருக்கத் திராவிடத்தார் சார்ந்ததிவர் !
சறுக்கல் ஆகும்!!
ஆற்றியநற் பணிகளையும் அரியசெயல் செய்த்தையும்!
அகத்தில் கொள்வோம்!!
!
(14-8-2011 ஞாயிறு அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற விழுப்புரம் தமிழ்ச்சங்க ஒன்பதாம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் பாடிய அறுசீர் மண்டிலப் பாக்கள்)
தமிழ்நம்பி