தகனிக்கப்பட்டவர்கள்.!
---------------------------------------------------------------!
நான் மரணத்தின் குறையிலிருந்து!
மீண்டுகொண்டிருக்கிறேன்!
கனவின் சுடுகாட்டின்!
புதைகுழி ஒன்றிலிருந்து!
அல்லது!
சாம்பல் மேட்டில் இருந்து.!
புதிய நாக்கு ஒன்றை சிருஷ்டித்து!
பேசும் ஒரு பொழுதுக்காக.!
மரணத்தில் அல்லது தகன வெளியில்!
புரண்டு அவதிப்பட்டு!
நித்திரை இல்லாமல் விழிகளைக் கசக்கி!
உயிரின் இருள்வெளிக்குள்!
திரிந்து அலைந்து இயலாமல்!
எழும்பி வருகிறேன்!
வலி கரையும் நினைவிற்காய்.!
நிலவின் வெளிச்சத்தை!
பார்த்துக்கொண்டிருக்க ஆசைப்பட்டேன்!
இருட்டில் புதைகுழி தோண்டி!
புதைக்கப்பட்டேன்!
சூரியனின் ஒளியை!
சுவாசிக்க ஆசைப்பட்டேன்!
நெருப்பால் எரித்து வீசப்பட்டேன்!
கடலின் ஈரத்தில்!
உலவ ஆசைப்பட்டேன்!
நீர் இன்றிய ஆழத்தின் உஷ்ணத்தில்!
தகனமாக்கப்பட்டேன்.!
தாகங்களின் நினைவை அழித்து!
சவப்பெட்டி செய்து!
என்னை நிரப்பிக்கொண்டார்கள்.!
எனது வாயின் அசைவுகளை!
எவரும் கண்டுகொள்ளவில்லை!
பள்ளிக்கூடத்திற்கு அல்லது கடைத்தெருவுக்கு!
போகும் சிறுவனின் அலம்பலைப்போல.!
புற்களில் மேய்ந்து உலவிக்கொண்டிருந்த என்னை!
பண்டிகை ஒன்றின் மதிய போசன விருந்திற்கான இறைச்சிக்கு!
வளர்க்கப்பட்ட ஆட்டுக்கடாவைப்போல்!
முடிவை எழுதி பிரகடனப்படுத்தினார்கள்.!
இனந்தெரியாத சடலமாக!
எறியப்பட்ட எனது தெருவில்!
இராணுவ சப்பாத்துகளின் கீழே!
அரசாங்க செலவில்!
அடக்கம் செய்ய!
ஜனாதிபதி உத்தரவிடட பொழுதில்!
ஆட்சி!
வருடத்தை பூர்த்தி செய்தது!
ஆயிரத்துநானூற்று ஐம்பத்துநான்கு!
புதைகுழிகளை அடைந்து.!
ஒரு துப்பாக்கியையும் சைனைட்டையும்!
அணைத்தபடிதான் கரைந்துபோக வேண்டும்.!
புதைகுழியில் அல்லது சாம்பல் மேட்டில்!
ஒன்று மட்டும் எஞ்சிக்கிடக்கிறது!
எனது அப்பாவித்தனம் அல்லது!
குழந்தை போன்ற சிரிப்பு.!
!
-தீபச்செல்வன்!
------------------------------------------------------------------!
20.11.2006 இலங்கை ஜனாதிபதி ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்தபோது!
ஆயிரத்துநானூற்று ஐம்பத்துநான்கு சனங்கள் பலியாகியிருந்தனர்
தீபச்செல்வன்