வானமெங்கும் வஞ்சியின் வடிவம் - ப.மதியழகன்

Photo by engin akyurt on Unsplash

மெல்லிடையாள், கொடிநடையாள்!
விழிகளிரண்டால் சமர் புரிவாள். !
கண்மணியாள், பொன் நிறத்தாள்!
செவ்விதழால் நவிலும் தேன்குரலால்!
மயிலிறகாய் தேகமெங்கும் வருடிக்கொடுப்பாள். !
நிலவொளியாள், மலர் முகத்தாள்!
மென் பஞ்சுப் பாதங்களால் மண் அளப்பாள். !
ஈசனின் இடப்பாகமானவள், உயிர்களுக்கு வித்தானவள்!
நாணி நிலம் பார்த்து வெட்கி கன்னம் சிவப்பாள். !
ஒளியின் கிரணமானவள், வானவில்லின் வண்ணங்களானவள்!
தனது தோற்றப் பொலிவைக் கொண்டு!
விண்ணையே வியக்க வைப்பாள். !
ஸ்படிக நீரானவள், மழையின் சுவை போன்றவள்!
முத்துப் போன்ற பற்களைக் கொண்டு!
சிந்தும் புன்னகையால் அந்த மின்னலையே தோற்கடிப்பாள். !
நதியின் நீரலையானவள், புயலின் மையம் போன்றவள்!
சிறு நகத் தீண்டலிலே மானிடனை தேவனாக்கி!
தனது வியத்தகு ஆற்றலை உலகோருக்கு உணர வைப்பாள். !
கார்மேகமானவள், விருட்சத்தின் வேர் போன்றவள்!
தனது தயை குணத்தால் பூமிப்பந்தின் சுழற்சியையே!
கண நேரம் நிறுத்திவைப்பாள். !
நிலைச்சுடரானவள், குழந்தையின் பசியைப் போக்கும்!
பால் போன்றவள்!
ஏக்கத்தினை காதல் பரிசாக தந்து,!
காதலையும், காதலனையும்!
உயிரோடு கல்லறையில் புதைத்து வைப்பாள். !
மலரின் நறுமணமானவள், விடை காண இயலாத!
புதிர் போன்றவள்!
என்றும் வளராத தேய்பிறையாய்!
ஆடவர்களின் வாழ்வை மாற்றி வைப்பாள். !
தெய்வத்தாயானவள், கருவறை தெய்வச்சிலை போன்றவள்!
தனது உணர்வெழுச்சிகளை சம்ஹாரம் செய்து!
உள்ளத்திலேயே பூட்டி வைப்பாள். !
ஐம்பூதங்களானவள், உடலை இயக்கும் உயிர் போன்றவள்!
அன்று தில்லை நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை!
மனக்கண்ணால் கண்டு அகிலம் வியக்க!
உள்ளிருந்து அந்தச் சிவகாமி ஆட்டுவித்தாள்
ப.மதியழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.