அகதிச்செடி.. செடி எடுத்துக் கொள்ளுங்கள்!
01.!
அகதிச்செடி!
-------------------!
புறக்கடையில் அந்த மாஞ்செடியை!
இரண்டு நாளாய்தான் பார்க்கிறேன்!
சிறு கொழுந்துகள் துளிர்த்து!
அருகில் நின்ற வேம்பின் நிழலில்!
பணிந்து நின்றிருந்தது!
யாருக்கும் தெரியாமல்!
பூமியில் கொஞ்சம் நீருறிஞ்சியும்!
வெயிலுக்கு தன்னைத் !
தொட அனுமதித்தும்!
அச்செடி தன் துளிர்ப்பை!
வெளிச்சத்தில் வைத்திருந்தது!
யான் அறிய விரும்புவதெல்லாம்!
எந்த வனத்திலிருக்குமோ!
இச்செடிக்கான தாய் மரம்.!
02.!
செடி எடுத்துக் கொள்ளுங்கள்!
---------------------------------------!
குழந்தையைச் செவிலியிடம் !
ஓப்படைப்பதைப் போல் !
பெயர்த்து வந்த புன்னைக் கன்றை !
பின் தோட்டத்தில் வைத்தேன்!
தொப்புள் கொடி மண்ணோடு !
கைக்கு வந்த புதுச்செடியை!
தன் கருவென சுமந்து கொண்டது தோட்டம்!
வேர் கொண்ட நிலத்தின் !
ருசியும் நாற்றமும் கொண்டு!
ஒரு தேவகன்னியின் செவ்விதழ்போல் அரும்பியது !
அதன் முதல் இலை!
மலர் கொண்ட காலத்தில்!
தாவரங்களின் தேவதையென!
தளும்பி நின்றது அதன் இளமை!
பெருங்காமத்தால் முறியும்!
தனித்திருப்பவளின் உடலைப்போல்!
காற்றுக்கு அதன் சிறு கிளை !
முறிந்த காலத்தில்!
அதன் விதை ஒன்று!
முட்டி முளைத்திருந்தது!
அதன் மடியில்!
இன்னொரு செவிலிக்கான!
குழந்தை அதுவென்று!
நினைத்துக் கொண்டேன்
மௌனன்