எண்ணத்.. விடியலை..என்ன..வாழ்க்கை - கிரிகாசன்

Photo by FLY:D on Unsplash

எண்ணத்தில் எண்ணத்தில்.. விடியலைத் தேடிநட..என்ன என்ன என்னடா?.. வாழ்க்கை..!
01.!
எண்ணத்தில் எண்ணத்தில்!
----------------------------------------!
இனிதொரு நாளில் எழுகதி ரோனும் இலங்கிடு குவிவானம்!
பனிதரு காலை பசும்விரி புல்லில் படகுளிர் மெய்காணும்!
தனியிவன் பாதம் தரைபட மலராய் தருவது கிளர்வாகும்!
புனிதமும் போற்றி இருளினை ஓட்டி எழுகதிர் ஒளிவீசும்!
மனிதரின் வாழ்வும் மகிழ்வினைத் தேடும் மனதொடு விரைந்தோடும்!
தனியிடம் போகும் பாதையில் எங்கும் தவறுகள் உருவாகும்!
மனதினி லின்றி மகிழ்ந்திட வென்று மறுபடி மனம் வாடும்!
கனவினில் காணும் வர்ணங்கள் யாவும் காலையில் மறந்தாகும்!
தமிழது கண்டு தாகமென் றாகி தருவது எதுவேனும்!
அமுதமென் றெண்ண அதுசுவை மாறின் தமிழது எனையேசும்!
குமிழிடு குளிர்நீர் குமிழிக ளென்றும் கடுதியில் பெரிதாகும்!
அமைதி என்றாலும் அளவினில்மாற அது உடைந்தழிவாகும்!
புவனமும் காண இயற்கை யென்றெண்ணி பகலினில் நிலவோடும்!
தவறென மீண்டும் இரவினில் வந்தே தண்ணொளி தனைவீசும்!
அவசரம் வாழ்வில் எழுவதுஎன்றும் மனிதரின் மனமாகும்!
நவமுகம்கொண்டு நாம்சிரித்தால் நல் மலர்களை மரம்தூவும்!
பசுந்தரை மீது பனி வருமோடி பகலவன் அதை வெல்லும்!
வசந்தமும் ஓடி வரும்மன தெங்கும் மலர் மணம் நிறைவாகும்!
கசந்திடு மனமும் கனிவுற எண்ணக் கனவுகள் விரிந்தாடும்!
இசைந்தது மனமும் இன்பமொன் றேதான் எண்ணியே உறவாடும்!
02.!
விடியலைத் தேடிநட..!
-------------------------!
படபட தடதட எனவரும் இடர்களும்!
விடுபட உயிர்பெறவே!
கடகட குடுகுடு எனநட தடைகளும்!
பொடிபட உடைபடவே!
கொடுகொடு பிடிபிடி எனத்துயர் தருபவர்!
பகைவரும் எமைவிடவே!
நடநட கிடுகிடு எனசெய லெடுகரம்!
இணைந்திடு ஒருபடவே!
தொடைகடகடவென நடுங்கிய நிலைவிடு!
மடைவெள்ளம் உடைபடவே!
விடுவிடு எனவரும் அலையென நடைஎடு!
எதிரிகள் விடைபெறவே!
தொடுதொடு குடையென வளையினும் தொலைவினில்!
உளவிரி வான்அருகே!
மடுமடு என அல்ல மலையென நிமிர்வரும்!
கொடுமைகள் தறிகெடவே!
தடுதடு வருமவர் தமிழரை நெருங்கிட!
துடிதுடி உனதுடலே!
எடுஎடு கொடுகொடு எதிரிகள்நடைபிழன்!
றுடைபட விழகுழியே!
மடமைகொள் ளவரிடம் எதுவென்ன பகர்வதில்!
ஒருபய னெதுவில்லையே!
அடியெனும் ஒருமொழி அறிவரே அதைவிட!
எதுவித புரிவில்லையே!
படுபடு கிடகிட எனவுடல் சரிந்திட!
அயர்வுடன் உறங்கிடவே!
துடிதுடி என அவன் கொலையிட உறவுகள்!
கொடுமையில் வதைபடுமே!
விடிவிடி எனவரும் விடியலும் உனதிரு!
விழிகளில் தெரிந்திடுமே!
அதுவரை விடுவிழி திறஒரு இரவதும்!
இலையுன தருகினிலே!
கடகட எனஎழு கனதுள செயவென!
திடமுடன் எடுநடையே!
இட இட முடிஉன திருகர மிடுசெயல்!
முடிவுற எமதுயர்வே!
சட சடவெனப்பகை சுடுமொரு கொதியுறும்!
அனல்பட நீறெனவே!
மடமட எனஎரி மறமுடன் தருமமும்!
பெருநெருப் பெனஎழவே!
சடசட எனஅடி சிறகொடு பறவைகள் !
திரிவது உயர்வினிலே!
திடமொடு உனதரு கடமையும் குறிதனும்!
நிலகொளும் மனதுயர்வே!
கடகட எனவருங் கடமைகள் தனை முடி!
பெறுவது தமிழீழமே!
அதுவரை உனதரும் இதயமும் துடிகொள்ளு!
விடுதலை கொடுஎனவே !!
03.!
என்ன என்ன என்னடா?!
------------------------------!
நேர்மையென்ப தென்ன என்ன, நீதி என்பதென்னடா?!
போர்புரிந்து மென்ன என்ன, போர்விதிகள் எங்கடா!
பாரிழைத்த தென்ன என்ன, பார்த்து நீதி கேளடா!!
ஊரழிக்க மன்னன் என்ன, எமன் விடுத்த தூதனா?!
கோலமிட்டு மென்ன என்ன, கோவில்கட்டி என்னடா?!
ஆலமிட்ட கண்ட னெங்கே, அரன் நினைப்பு என்னடா?!
காலமிட்ட தென்ன என்ன? கன்னியர்க்கு மேனிதான்!
கால்மிதித்துக் கொல்லு என்று காலதேவன் சட்டமா?!
காலைப்பூ மலர்ந்த தென்ன, காயும் வெப்பம் கொல்லவா?!
பாலையில் விழுந்த நீரைப் போலஈழம் செல்லவா?!
சேலையை இழந்த பெண்கள் சீரழித்தல் கண்டுநீ!
மூலையிற் படுத்துறங்க மேனிஎன்ன கல்லோடா?!
வீறுகொண் டெழுந்து நில்லு வெல்லவென்று துள்ளடா!
ஆறுபோ லெழுந்து ஓடு அன்னைபூமி வெல்லடா!
நீறு கொள்ள மேனி கொன்று நித்தம்தீ கொளுத்துவோர்!
கூறுபோட முன் பிடித்து கூட்டில் தள்ளிப் பூட்டடா !
வாழையும் கனிந்துவந்து வாயில் சேருமென்றடா!
நாளைஎண்ணி நீஇருப்ப தாகுமாமோ கூறடா!
வேளையில் பழுக்குமென்று விட்டுகாத் திருக்கவே!
பாழும்அஞ்சுகம் பறக்கும் பஞ்சை விட்டகதையடா!
பொன்னிழைத்த தட்டிலில்நாடும் புன்னகைத்து மெல்லவே!
நன்மைசெய்து நாமளித்தோம் நாடுஉங்க ளானதே!
என்றுருக்க உள்ளங்கொண்டு ஈழமீவ ரென்பதை!
இன்னும்நம்பி எந்தநாடு எம்மைகாக்கும் என்பதோ?!
முன்னெடுத்த கால்களோடு மெல்லஉண்மை கண்டுநீ!
தன்நிகர்த்தல் யாருமற்ற தன்மைகொண்டாய் நம்படா!
உன்னெடுப்பில் ஊரில்கேட்ட வெற்றிமுரசம் எண்ணடா!
நின்னைநீயே நம்பு வாழ்வில் நீதிஒன்று உண்டடா!
!
04.!
வாழ்க்கை!
-----------------!
தேனோடும் மனம் மீதோடும் துயர்!
தானோடும் மகிழ் வேயாகும்!
வானோடும் முகில் போலோடும் உளம்!
வாழ்வோடும் வழி தானோடும்!
மீனோடும் கடல் மேலோடும் அலை!
போலாடும் அது தள்ளாடும்!
தானோடும் அலைமீதாடும் அது!
தாங்கும் ஓடம் வாழ்வாகும்!
நிலவோடும் ஒளி நிலம்மூடும் அதில்!
நினைவோ டினிமைகள் குதிபோடும்!
பலஓடும் முகில் அருகோடும் சில!
அதைமூடும் பொழு திருள்கூடும்!
கலையோடும் மனம் தமிழோடும் சில!
காலம் மகிழ்வுடன் இருந்தாலும்!
பலமோடும் பெரும் வலியோடும்!
பல துன்பம் மகிழ்வைப் பந்தாடும்!
மலைபோலும் மனதிடமோடும் அதில்!
கனிவோடும் நாம் நடந்தாலும்!
வலைபோடும் விதி வாழ்வோடும் பல!
வழியிற் துயர்தர விளையாடும்!
சிலைபோலும் மனம் இருந்தாலும் அதிற்!
சிலநேரம் விழி வழிந்தோடும்!
நிலைமாறும் துயர் தனை ஓடும்வகை!
நினைவை மாற்றிடும் நிலைவேண்டும்!
விழிமூடும் வரை வழிதேடும் பெரும்!
வாழ்வில் எதுவரை உரமோடும்!
எழிலாடும் மலர் இதழ்காணும் மெது!
இதயம் கொண்டிட வாழ்ந்தாலும்!
வழிதோறும் பல குழிகாணும் அதில்!
வீழ்ந்தே அடிபட வலிதோன்றும்!
எழிதோடும் நல்ல இயலோடும் அதை!
இல்லா வகைசெய்து எழுநீயும்!
வாழ்வோடும் அது வானோடும் சுடர்!
போலாகி ஒளிவந்தாளும்!
நாள்கூடும் வரை போராடும் மனம்!
பேராழித் திரை போலாடும்!
வீழ்வோடும் பெருவளைவோடும் அது!
வீழ்ந்தாலும் உடன் வீறோடும்!
ஆழ்வோடும் வெகுஅழகோடும் அது!
அலைந்தும் உயர்ந்திடக் கரைநாடும்!
இனிதோடும் மனம் இதுபோலும் நிலை!
இருந்தும் வாழ்ந்திட வழிதேடும்!
கனிதேடும் கிளி என்றாகும் படி!
கலையில் இனிமையை மனம்தேடும்!
பனிமூடும் அது விழிமூடும் பின்!
படபட வென்றே இடி தோன்றும்!
எமை நாடும் எதுவென்றாலும் அதை!
எதிர்கொள்ளும் மனம் இறை வேண்டும் !
மீனோடும் அதுஆறோடும் அலை!
மீதோடும் அது சேர்ந்தோடும்!
ஏனோடும் சிலஇளமீன்கள் அதில்!
எதிரோடும் நிலை போலோடும்!
தானோடும் குளிர் நீரோடும் சில!
தடுமாறும் அதில் இடம்மாறும்!
தேனோடும் அத் திரைநீரில் அவை!
தேடிச் சுகமும் கொண்டாடும்
கிரிகாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.