இருப்பதிகாரம் - வ.ந.கிரிதரன்

Photo by FLY:D on Unsplash

வ.ந.கிரிதரன் -!
நிலை மண்டில ஆசிரியப்பா!!
!
வானினை நிலவினை வரையினை மடுவினை!
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்!
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை!
மீறிட முடியா சிந்தையை மேலும்!
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்!
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்!
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்!
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?!
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?!
விரியு மண்ட மடக்கு மண்டம்!
அதனை யடக்க மற்றோ ரண்டம்.!
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.!
இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு.!
இதுவும் நிசமா நிழலாக் கனவா?!
நனவும் கனவா? கனவும் நனவா?!
விடைகள் நாடித் தொடரும் வினாக்கள்.!
விடைக ளற்ற வினாக்கள்! வினாக்கள்!!
இருப்பு அறிந்திட தேடித் தொடரும்!
இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே!!
இதனை அறிதல் புரித லெவ்விதம்?!
நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக்!
கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை!
வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை!
அறித லெவ்விதம்? புரித லெவ்விதம்?!
கலவிக் குலாவி யிருந்திடு மவைகளாய்!
இருந்தே யிருப்பின் இவ்வித இடரெலாம்!
இல்லா தொழிந்து இருந்தன்றோ இருக்கும்?!
செயற்கை சமைத்திட சிந்தை தந்த!
செயலினால் தானோ செகத்தினில் துயரோ?!
அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க!
என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட!
பண்பினால் தானோ பாரினில் பகைமை?!
தாமரை இலைமேல் தண்ணீர் போன்று!
தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு!
நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து!
விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை!
வந்திடு மென்றால் அதுவே போதும்.!
வேறு....!
அந்திக் கதிரின் சிவப்பில் நாளும்!
சிந்தை யிழந்து இருத்த லின்பம்!!
இரவில் வானில் நீந்தும் மீன்கள்!
வரவி லிதயம் மூழ்கிக் களிக்கும்.!
விசும்பும் மதியும் கதிரும் காற்றும்!
புள்ளும் மற்று மிருக்கு மனைத்தும்!
படைப்பின் திறனை பறையே சாற்றும்.!
இன்ப வெள்ளம் மடையை யுடைக்கும்.!
கூகைக ளுலாவிடும் நள்யாமப் பொழுதும்!
அகத்தினி லுவப்பினை யேற்றி வைத்திடும்.!
உறவினை உதறி யுண்மை அறிதல்!
துறவென ஆயிடு மதனா லதனை!
ஏற்றிடே னானால் உள்ளி ருந்தே!
உண்மை காணலே சிறந்ததோ தறியேன்.!
எவ்வித மிருப்பின் உண்மை அறிவேன்.!
உளையு முளத்தின் உளைவை எவ்விதம்!
தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?
வ.ந.கிரிதரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.