தலைவனின் மதம்.. சாபத்துக்குரியவனின் வாழ்வு!.. பாதுகாப்பற்ற உலகத்தில் வசிப்பவள்!!
01.!
தலைவனின் மதம்!
---------------------------!
மக்களுக்காக தலைவர்கள்!
வாழ்ந்த காலம் போய்!
தலைவர்களுக்காக!
மக்கள் வாழ வேண்டிய!
கலி காலம் இது..!
இங்கும் எனக்கு தெரிந்த!
ஒரு கோண் கோலோச்சுகிறான்!
திசைகள் நாற்புறமும் மந்திரித்து!
பூதங்கள் நிறுத்தியிருகிறான்!
ஏவல்,விலக்கல் இரண்டும்!
அவனது ஆணையின் படியே!
ஆகுமானதாகிறது...!
வாக்கையும்,வசதியையும் வழங்கியவன்!
கஞ்சிக்கும் வழியற்று !
கல்வெட்டு கனவுகளில்...,!
வாக்கையும்,வசதியையும் வாங்கியவன்!
வெல்வெட்டு விரிப்புகளின் !
வீராப்பு இருக்கைகளில்!
தலைவனின்!
இருப்பின் சௌகரியத்தை!
மேல் நாட்டு நாய் கம்பிரமாய்!
குரைத்து சொல்கிறது “வாவ்” வென..!
அந்த தெருவே குலை நடுங்கும் அளவு!
வசதியின் அனைத்து படித்தரங்களும்!
அரண்மணையின் தட்டுகளை!
நிறைத்து இருக்கின்றன!
இறக்குமதி மதுபான புட்டிகள்!
குவளைகளுக்குள் குதிக்க!
தயாராகி நிற்கின்றன!
கண்ணாடி மேசியில்!
தடாகத்தில் நீந்துகின்றன!
தலைவன் விரும்பி உண்ணும்!
செதிலற்ற மீன்கள்!
இப்போதும் அவனது கல்லையில்!
இரண்டு துண்டுகள் வலதும்,இடதுமாய்!
“செகுருட்டி கமரா” என்னும்!
தெய்வங்களை வழிபட்டபடி!
தலை நகரில் தரித்திருக்க!
தலைவனின் மதம் படர்ந்து!
வேர் பிடிக்கிறது என் மண் பற்றி!!
!
02.!
சாபத்துக்குரியவனின் வாழ்வு!!
------------------------------------------!
வேறொருவரை!
வலிந்து தினிப்பதர்க்கென!
அரசின் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறது!
கண்களில் தேக்கி வைத்திருந்த!
வீடெனும் கனவு!
பின்புலம் அற்றவனின் வாழ்வு!
அக்கணமே சாபத்துக்குரியதாகிறது!
இன்றைய குடில் புற்றில்!
நீர்ப் பாம்புகள் சீறியபடி!
சூரியனை நோக்கி படமெடுக்க!
குடும்ப அரங்கில் வசை வசூல்!
களை கட்டுகின்றன பேச்சு வாக்கில்!
கல்லா கையாலாகத்தனத்தை கௌரவித்து!
விளை நிலங்களில் தத்துப்புழு தாவி!
அறக்கொட்டியென மேய!
தூற்றி விடப்படுகின்றது!
நம்பிக்கையின் கடைசி மணியும் பதரென!
எஞ்சிய மூட்டைகளாலாகும் நிவாரணம்!
இடைத்தரகர்களின் விலை நிர்ணயமாக!
எதிர் பார்ப்பின் கால்கள் இடர!
உடைந்த வக்கடைகளில்!
இடிந்து விழுகிறது முகம் குப்புற மனசு!
பரண் திடலில் நாட்டிய!
ஆள் விரட்டி பொம்மையென!
வரப்பில் வரிசையாய்!
கொடுப்பனவு பாக்கியுள்ள கூலிகள்!
“வேலையற்றவனின் வேலையென்று”!
மனைவி போனமுறை!
சொன்ன சொற்கள்!
கன்னத்தில் அறைந்து விட்டு போக!
துரத்திய யானைகளின் பிளிறல்!
ஒலிக்கின்றன செவியின் சுவரில்!
மரணத்தை தோற்றுவிக்க தக்கதாய்!!
03.!
பாதுகாப்பற்ற உலகத்தில் வசிப்பவள்!!
------------------------------------------!
புண்ணிய பூமி என்ற!
கன்னி கழிந்த!
மனிதம் தொலைந்த மண்ணின்!
வனாந்திரத்தில் வாழ்வது!
எத்தனை கடினம் என்பது!
இருள் சூழ்ந்த இன்றைய!
விஷமப் பொழுதுகளிலிருந்து!
விளங்க முடிகிறது..!
திரும்பும் திசையெங்கும் திகில் முகங்கள்!
பூக்கூடைகள் வைத்திருக்கும் என்மேல்!
சாக்கடையினை வாரியிறைக்க!
சமயம் பார்த்தபடி காலம்!
வழி நெடுகிலும் பின் தொடர்ந்து!
நிலவுவரை சென்று திரும்பி!
வாசல் வரை வர்ணிக்கிரவன்!
சந்தடிகளற்ற சமயம் ஒன்றிற்கே!
சாதகம் பார்க்கிறான்!
நெரிசலில் உரசியபடி தினமும்!
அருவருப்பின் உச்சத்தில் மேய்ந்து!
நெளிகின்றன மண் புழுக்கள்!
என் ஏற்ற இறக்கங்களை!
கொத்திப் பறக்கின்றன!
பெயர் தெரியாத கழுகுகள்!
முள்ளம் பன்றிகளின் ஆக்கிரமிப்பில்!
எனது சேனை நிர்மூலமாக!
இன பந்தங்களை தொலைத்த மண்ணில்!
இன்றைய என் இருப்பின்!
இருபத்து நான்காவது!
இறுதி மணித்துளியும்!
பாதுகாப்பு அற்றதாகவே ஆயிற்று!
எனவேதான் நான்!
வாழ்வின் கடைசி பாடலை!
கடலிடமே சொல்லி கரைகிறேன்

ரோஷான் ஏ.ஜிப்ரி