நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது!!
எமக்குப் பின்னால் !
பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது!!
தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது !
வெண்பனி!
தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி!
எம் செவி வழி நுழைந்தது!
வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை !!
சந்தடி ஓய்ந்த தெரு வழியே !
நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் !!
இப்படியே !
எத்தனையோ இரவுகளில் !
விவாதிப்போம் நெடு நேரம்!
முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன்!
பிரிந்து செல்வோம் !!
பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில்!
உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த !
அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் !!
பரணி... !
உன் நினைவுகள் தேய்ந்து கொண்டிருந்த வேளை!
மாரி கால அந்திப் பொழுதொன்றில் !
நனைந்த சீருடைகளில் இருந்து நீர் சொட்டச் சொட்ட!
மீளவும் நீ வந்தாய் !!
அலையெழும்பும் கடல் பரப்பினில் !
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:!
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !!
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...!
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !!
திரைகடல் சென்ற திரவியமானாய் !!
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ!
திரும்பி வரவே இல்லை !!
இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது !
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !!
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !!
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்!
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ? !
- பஹீமா ஜஹான்!
2002!
ஒரு கடல் நீரூற்றி...தொகுப்பிலிருந்து

பஹீமா ஜஹான்