01.!
அவிழ்!
------------!
தானாய் அவிழும் முடிச்சுகளில்!
முட்டித் துடித்துவரும் ஓலங்கள்!
என்காலடிகளைத் தேடி!
ஓடிவருகின்றன.!
அடக்கம் செய்யப்படாததாய்!
சாவறிவித்தல் கொடுக்கப்பட்ட ஓலங்களில்!
மரணத்தின் உறவினைக் காணமுடியவில்லை.!
எனது முடிச்சு அவிழும் பொழுதுகளில்!
அதன் உயிர்ப்பின் கூர்மையை அனுபவிக்கிறேன்!
ஓரங்கள் சீவப்பட்ட எனது காலடிகள்!
இரத்தத்திலே தோய்ந்திருப்பதாக!
அம்மா அழுகின்றாள்.!
நான் எனது மண்ணில் நடக்கிறேன்...!
வெளியெங்கும் சிவப்பாகும் காலத்தை!
நான் என சந்ததிக்காய் வரைந்து கொள்வதாக!
நீ சொல்வது எங்கும் கேட்கிறது.!
மண்ணின் முடிச்சுகள்!
உனக்குள்ளும் அவிழ்ந்து கொள்ளும்.!
விட்டு விடுதலையாகும்!
ஓலங்களின் தரிசனத்தினை!
அப்போது நீயும் வரைவாய்.!
02.!
உயிர் வளையம்!
-------------------------!
வார்த்தைகள் நெருங்கா!
வளையத்துள் எங்கள் உயிர்!
படுத்திருக்கிறது சோர்ந்து.!
நீயெறியும் சொற்கள்!
உணர்வுகளறுந்து அம்மணமாய்!
திசைகளற்று ஓடியலைகிறது.!
எங்களுக்கான சொற்களை!
எண்ணியெண்ணி அடுக்குகிறேன்!
உயிர் வளையத்துள்.!
ஒலிதின்னும் பேய்ச்சுழலொன்று!
புலன்மயக்கி ஓடித்திரிகிறது.!
உனதுமெனதுமான சொற்கள்!
உலர்ந்தபின் உடைந்துபோய்!
சத்தமற்று எரிகின்றன.!
ஒலியறுந்த நெருப்பினைப் பார்த்தபடியே!
படுத்திருக்கிறது எங்களுயிர்

ந.மயூரரூபன்