மழைக்கால இரவின் - நிந்தவூர் ஷிப்லி

Photo by engin akyurt on Unsplash

தேவதைக்கனவுகள்…!
-----------------------------------------------------------!
அடைமழை கிளறும் மண்வாச நுகர்ப்பொழுதில்!
கண்களில் விழுந்த தேனருவி தேவதை உன்!
புன்சிரிப்பின் நீள்வனப்பில் என்னுயிர் திடும்மென!
தொலைந்துபோனதாய் ராத்திரிக்கனவுகள் உளறித்திரிவதைப்பார்..!
நீல வானம் இருண்ட அந்த அந்திமாலையில்!
நீல வர்ண சேலைவழியே உன் எழில் தேகமதில்!
தவறிவிழுந்த மழைத்துளிகள் தீப்பற்றியெரிந்ததாய்!
மீண்டும் மீண்டும் கனவுகள் முணுமுணுப்பதையும் பார்..!
சேறும் சகதியும் விரவிக்கிடந்த சாலையில்!
தேவதையுன் கால்தடம் தேவலோகச்சிற்பமாய்!
என் விழிகளில் செதுக்கப்பட்ட கணங்களின்!
ஆனந்த வார்ப்புக்கள் பெருமழையாய் அதே கனவில் சொட்டுவதையும் பார்..!
உன் விரல் தீண்டிய குடைக்கம்பிகளில் ஒட்டத்துடித்த!
என் ஸ்பரிசத்தட்ப வெட்பம் அதிர்ந்ததிர்ந்து!
ஓய்ந்த மழையென ஓரமாகிப்போன கண்ணீர் நிகழ்வதை!
அன்றோடே விட்டெறிய ஏங்கிக்கிடக்கும் என் கைவிரல்களையும் பார்..!
இன்னும் உனக்காகத்துடிதுடித்து உன் பெயரை உச்சரித்து!
மெல்லவும் முடியாமல் விழங்கவும் முடியாமல்!
காத்திருப்பின் கடைசிமுனையில் தொங்கிக்கொண்டிருக்கும்!
உன்னுயிர் தாங்க ஏங்கி நிற்கும் என் மனதையும் பார்..!
காதலின் உற்சவம் நம் கண்களில் கலக்கட்டும்!
காதலின் மகோன்னதம் நம் உயிர்வெளியில் நிறையட்டும்!
காதலின் தாண்டவம் நம் இதழ் வழியே ஆடட்டும்!
காதலின் சங்கீதம் நம் குரல் வழியே பாடட்டும்..!
உன் கைரேகை என் கைகளில் படரப்போகும்!
உத்தரவாதமொன்றுக்காய் விழித்திருக்கும் என் ராத்திரிக்கனவுகளில்!
தேவதை மின்னலென சட்டென்று மறைந்துபோகாமல்!
மின்னலேந்தும் வானமென என்னுடன் உடனிருக்கச்சம்மதமா?
நிந்தவூர் ஷிப்லி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.