அழகாய் உடுத்தி வந்த நாட்களில் !
என்னைப் பார்த்து சொன்னாய்!
கழுதைக்கு சேனம் கட்டினால் குதிரையாகுமா!
அவிழ்த்து விட்டு அள்ளிப்போடென்று... !
அழுகிய மணமொன்றிற்கு அஞ்சி!
மூக்கைப் பொத்திய நாட்களில்!
மூச்சை ஆழ இழுத்து வெளிஊதி சொன்னாய்!
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனையென!
உழைத்து ஓய்ந்து அயர்ச்சியடைந்த நாட்களில்!
உண்டுறங்க ஓர் இடம் கேட்டேன்!
கழுதை புவியிலிருந்தாலென்ன ... !
பாதாளத்தில் இருந்தாலென்னவென்றாய்!
நீ சொல்லும் புனிதக் காதலை!
நானும் கண்டடைந்து!
மாலையும் கழுத்துமாய் நின்றபோது!
கழுதைக் காமம் கத்தினால் தீருமென்றாய்!
சந்ததிப் பெருக்கத்தில் நிலமொன்று கேட்டேன்!
நிலத்திற்கு விலையாக நிறையக் கேட்டாய்!
கழுதை விட்டையானாலும்!
கைநிறைய வேண்டுமென்றாய்!
சந்ததி சந்ததியாய் உழைக்கிறேன் !
உன் சந்ததிக்கு...!
அலுங்காமல் அள்ளிக்குவித்துக் கொண்டு சொல்கிறாய்!
கழுதை உழுது கம்பு விழையாதென!
இன்னும் நிறையச் சொல்லியிருக்கிறாய்...!
கேட்டுக் கேட்டு நான் யாரென மறந்துவிட்டேன்...!
காதுகள் கூட கழுதை போலாகிவிட்டது...!
கழுதைச் சுமை அறியாத!
உன்னைப் போலிருந்துதான் என்ன செய்ய

மன்னார் அமுதன்