தோழர் தெய்வநாயகத்தை!
எல்லா மேடையிலும் பார்க்கலாம்.!
நெஞ்சைத் தட்டி கையைத்தூக்கி!
ஆரம்பித்தால்!
நம் மேனேஜர் மேல்!
நமக்கே கோபம் வருமளவு பேசுவார்.!
சிலிக்கான் வேலியில் வேலைகிடத்த!
மகனுடன் இருக்கப்போவதாய் சொல்லி!
அமேரிக்கா கிளம்பும்போது!
பரணிலிருந்த புத்தகங்களை எரித்துவிட்டார்.!
!
பல ஊர் கோயிலுக்கு!
பெயர்வைத்தவர்!
முத்தையா ஸ்தபதி!
வெளிநாட்டுக்கு சிலை கடத்தியதாய்!
மகன் பிடிபட்டதும்தான்!
கடவுள் இல்லை எனச்!
செதுக்கி வைத்துவிட்டு!
சிலை மருந்து தின்று!
செத்துப்போனார்.!
மகனைக்காட்டித் கொடுத்தவர் இவர்தான்!
என்று கூட சிலர் சொன்னார்கள்.!
!
கண்ணாடிக்காரர் தோட்டம்!
மாங்கனிகளுக்கு பெயர்பெற்றது!
கிளி மூக்கிலிருந்து!
மல்கோவாவரை ரகம் ரகமாய் இருக்கும்!
‘செத்தாலும்!
மாமட்டைல எரிச்சுடுங்க மக்கா’!
என கண்ணீர் மல்கிச் சொல்வார்!
மகன் படிப்புக்காக விற்கும்போது!
சிரித்தபடி இருந்தவர்.!
பாதியில் படிப்பைவிட்டுவந்து!
காணாமல் போன மகனை!
கண்ணாடிக்காரர்தான் வெட்டி!
அதே தோட்டத்தில் புதைத்துவிட்டதாய்!
ஊருக்குள் இப்பொழுதும் பேசுவார்கள்.!
!
ஊர்ப்பக்கம் தலைவைக்கமாட்டேனென!
மண்தூற்றிப்போனவர்!
முட்டாய்க்கடை முருகையா.!
ரியல் எஸ்டேட்டில் ஆளாகி!
திரும்பி வந்தபோது!
தான் அவமானப்பட்ட நிலங்களை!
தேடித்தேடி விற்றார் என!
தெரிந்தவர்கள் சொன்னார்கள்.!
!
ஒவ்வொருமுறை தலைசீவியதும்!
கலைத்துவிட்டுக் கொள்வாள்!
அம்சா.!
‘ஒழுங்கா இல்லைனா!
அம்மா தூக்கிக்க மாட்டாங்க’!
என்ற போது!
‘போப்பா ! அம்மாவப்பத்தி!
உனக்கு தெரியாது.!
அவங்க வயித்துக்குள்ள!
இதே ஹேர்ஸ்டைல்லதான்!
பத்து மாசம் இருந்தேன்; என்றாள்!
!
பிறகு ஒரு நாள்!
சந்திக்கையில்!
நான் ‘இன்னொருவனைக்காதலித்தால்!
என்ன செய்வாய்’!
என்று கேட்டாள் கெளரி!
‘இந்த நிமிடமே கிளம்பிப்போய்விடுவேன்’ என்றேன்.!
மறுநாள் சந்திக்கையில்!
‘யாரையும் காதலித்ததில்லை’ என்றாள்.!
காதலிக்கப்போவதில்லை என்று சொல்லியிருக்கலாம்
லதாமகன்