நான்கு வழிச் சாலை - கண்ணன். சி

Photo by Sajad Nori on Unsplash

நான்கு வழிச் சாலை!
நகரங்களை இணைக்கும் சாலை!
நாள் கிழமை பார்த்து!
நவ தானியங்கள் இட்டு!
நான்கேழுதலைமுறைக்கு!
நிலைத்து நிற்க நிலை வைத்து!
பகல் இரவு பாராது உழைத்து!
பார்த்து பார்த்து கட்டிய வீட்டை!
பகலிலேயே கொள்ளை கொண்ட சாலை!
வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம் என்ற!
வீர கோஷத்திற்கு முன்னரே!
சாலையெங்கும் சோலையாக நின்று!
கத்தரி வெயிலை தான் வாங்கி!
கரியமில வாயுவை உள் வாங்கி!
நா ஊற சுவை கூட புளி தந்து!
நல்லவன் கெட்டவன் பார்க்காம நிழல் தந்து!
நட்டமா நின்ன நெட்டை மரங்களை!
கட்டை கட்டையா வெட்ட வச்ச சாலை!
துடியான கருமாரி!
தூங்காத கருப்புச்சாமி!
அரச மர பிள்ளையார்!
ஆடிக் கூழ் அம்மன்!
அத்தனை பேரையும்!
இடம் மாத்தி தடமான சாலை!
காட்டை கொடுத்தவனுக்கும்!
மேட்டை கொடுத்தவனுக்கும்!
உழுத நிலத்தை கொடுத்தவனுக்கும்!
ஒண்டிக் கிடந்த வீட்ட கொடுத்தவனுக்கும்!
காசு தந்த கடையை விட்டுக் கொடுத்தவனுக்கும்!
நன்றி கெட்டு சுத்தி சுத்தி வரவச்ச சாலை!
ஊரை ரெண்டாக்கி!
ஊருக்குத் தண்ணி தரும்!
ஊருணியை மேடாக்கி!
ஏர் உழவனின்!
ஏரியை துண்டாக்கி!
வாய்க்காலை பாழாக்கி!
நன்செய்யை நாசாமக்கி!
பாதைகளை வீணாக்கி!
பயன் தரும் மரங்களை பிணமாக்கி!
அரளிச் செடி தாங்கி!
அம்சமாய் படுத்த சாலை!
அரச மரத்து நிறுத்தம்!
ஆல மரத்து நிறுத்தம்!
பத்துப் பனை மரம் நிறுத்தம்!
ஒத்தப் புளிய மரம் நிறுத்தம்!
புங்கை மர நிறுத்தம்!
வேங்கை மர நிறுத்தம்!
மா மர நிறுத்தம்!
பூ மர நிறுத்தம்!
அத்தனையும் அடையாளமில்லாம ஆக்கி!
உலகத் தரத்தில் ஒய்யாரமா நின்ன சாலை!
நான்கு வழிச் சாலை...!
நகரங்களை இணைக்கும் சாலை!
கண்ணன். சி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.